இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எலக்ட்ரிக் -வாகனத் துறைகளில் தொடர்ந்து தனது வர்த்தகம் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்து வருவதால், இதைப் பணமாக்கிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சமீபத்தில் டாடா குழுமத்தின் டாடா டெக்னாலஜி ஐபிஓ முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான லாபத்தைக் கொடுத்தது. இந்த ஐபிஓ வெற்றிக்குப் பின்பு தான் இந்திய ஐபிஓ சந்தை மீண்டும் களைகட்ட துவங்கியது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அடுத்த ஐபிஓ வெளியிட டாடா குழுமம் தயாராகியுள்ளது.

டாடா குழுமம் அதன் பேட்டரி வணிகத்தைத் தனியாகப் பிரித்து ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா நிறுவனம், அக்ரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஒரு தனி யூனிட்டாகப் பிரிப்பது பற்றிய ஆரம்பக் கட்ட ஆலோசனையில் உள்ளது. தனியாகப் பிரிப்பது மூலம் பேட்டரி வணிகத்திஸ் தனிப்பட்ட முறையில் முதலீட்டை திரட்டுவது எளிதாகும். இதேபோல் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது எளிதாகும்
Agratas Energy Storage Solutions நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சந்தை சூழ்நிலைகள் பொறுத்து 5 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் தொகைக்கு மதிப்பிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமம் இதுகுறித்து எவ்விதமான கருத்தும் வெளியிடவில்லை.
அக்ரடாஸ் நிறுவனம் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் தொழிற்சாலை வைத்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் ஆட்டோமொபைல் மற்றும் எரிசக்தித் துறைகளுக்குத் தேவையான பேட்டரிகளைச் சொந்தமாக வடிவமைத்துத் தயாரிக்கிறது என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆட்டோமோட்டிவ் தான் Agratas Energy Storage Solutions நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர். டாடா மோட்டார்ஸ்-ன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கும், உற்பத்திக்கும் Agratas நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது.
எஸ்யூவி வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகன பிரிவில் வலுவான விற்பனை வளர்ச்சி காரணமாக டாடா மோட்டார்ஸ் கடந்த மாதம் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கக் கார் தயாரிப்பாளராக உயர்ந்தது. ஜாகுவார் லேண்ட் ரோவர் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சிறப்பான லாபத்தைக் கடந்த காலாண்டில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அக்ரடாஸ் தனது தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கிரீன் லோன் ஆகத் திரட்ட வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் ஜனவரி மாதம் தெரிவித்தது.


Click it and Unblock the Notifications