பிரபல டாடா பவர் சோலார் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து தொழில்நுட்ப இயக்குனரகம் வாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் டிப்ளமோ படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா பவர் ரினிவபில் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக டாடா பவர் சோலார் லிமிடெட் நிறுவனம் செய்யப்படுகிறது. டாடா நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சூரிய சக்தி மின் உற்பத்தியில் டாடா பவர் சோலார் லிமிடெட் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி தமிழ்நாடு அமைப்போடு சேர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப இயக்குனரகம் வாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் டிப்ளமோ படிப்புகளை அறிமுகம் செய்ய இருக்கிறது. வழிகாட்டி தமிழ்நாடு அமைப்பின் மேலாண் இயக்குனரும் தலைமை செயல் அதிகாரமான டாரேஷ் அகமது, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் ஆணையர் இன்னசென்ட் திவ்யா மற்றும் டாடா பவர் ரினிவபில் எனர்ஜி நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி அனுபமா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2025 -26 ஆம் கல்வியாண்டில் இருந்து இந்த டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் டிப்ளமோ படிப்பினை தேர்வு செய்து படிக்க முடியும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆண்டுதோறும் இந்த படிப்பில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மூன்று மாதங்கள் வகுப்பறையிலும் ஒன்பது மாதங்கள் துறை சார்ந்த நிபுணர்கள் இடமிருந்து செய்முறை பயிற்சியையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பில் சேரக்கூடிய மாணவர்களுக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓராண்டு 240 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர். ஆனால் அவர்களிடம் வேலைக்கு தேவையான திறமைகள் இருப்பது கிடையாது என்ற குறைபாடு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதுமே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் கவனம் செலுத்துகிறது.
இந்த துறையின் வளர்ச்சியும் எதிர்கால வேலைவாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது என்பதால் அரசு இந்த டிப்ளமோ படிப்புகளை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இந்த துறையில் இயங்கி வரும் டாடா நிறுவனமே இந்த படிப்பை வழங்குவதால் மாணவர்களுக்கு துறை சார்ந்த நேரடி பயிற்சி வகுப்புகளும் கட்டாயம் இடம்பெறும்.


Click it and Unblock the Notifications