சென்னை: இந்திய விமான போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையிலும், முன்னணி விமான நிறுவனங்கள் 100, 200, 400 என புதிய விமானங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டு உள்ள வேளையிலும் விமான ஓட்டுநர்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த பிரச்சனையைத் தீர்க்க மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி நகரில் விமான ஓட்டுநர் அதாவது பைலட் பயிற்சி பள்ளி ஒன்றை ஏர் இந்தியா நிறுவனம் நிறுவவுள்ளது. இந்தப் புதிய Flying School மூலம் ஆண்டுதோறும் சுமார் 180 விமான ஓட்டுநர்கள் பயிற்சி பெற்று விமானத்தை இயக்க தகுதி அடைவார்கள்.

டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா, பைலட் பயிற்சி பள்ளியில் ஆர்வமுள்ளவர்களை சில அடிப்படைத் தகுதிகள் மட்டும் வைத்து முழுநேர பயிற்சி பள்ளியில் சேர அனுமதிக்கிறது. இந்த பைலட் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், நேரடியாக ஏர் இந்தியாவின் விமானத்தில் பணிபுரியும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கும்.
இது, இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முறையில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றமாகும்.
இதுவரை, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தனியார் விமான பயிற்சி பள்ளிகளுடன் இணைந்து தங்கள் சொந்தப் பெயரில் பயிற்சி திட்டங்களை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தனர்.
உதாரணமாக, இண்டிகோ ஏழு விமான பயிற்சி பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் ஏர் இந்தியா முதல் முறையாகச் சொந்தமாக ஒரு பயிற்சி பள்ளியை துவங்கியுள்ளது, இந்திய விமான நிறுவனங்கள் மத்தியில் முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த புதிய பயிற்சி பள்ளிக்காக அமெரிக்க நிறுவனமான பைபர் (Piper) மற்றும் ஐரோப்பிய நிறுவனமான டைமண்ட் (Diamond) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஏர் இந்தியா சுமார் 30 சிங்கிள் எஞ்சின் விமானங்கள் மற்றும் 4 மல்டி எஞ்சின் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
டாடா குழுமத்தின் சொந்தமான இந்த விமான நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக சுமார் 470 விமானங்களுக்கான ஆர்டர் செய்துள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டில் ஆறு நாட்களுக்கு ஒரு புதிய விமானத்தை இணைப்போம் என்று தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்தார். இந்த விமானத்தைத் திறம்பட இயக்க கட்டாயம் போதுமான பைலட்கள் தேவை.
இந்தியாவில் விமான ஓட்டுநர் பயிற்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் விமான பயிற்சி எடுத்து பைலட் உரிமம் பெறும் 40 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறுகின்றனர்.
வெளிநாட்டில் பைலட் பயிற்சிக்கான கட்டணம் ரூ.1.5 முதல் ரூ.2 கோடி வரை செலவாகிறது. தற்போது ஏர் இந்தியா களத்தில் இறங்கியுள்ளது வெளிநாட்டுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும்.


Click it and Unblock the Notifications