பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது மாபெரும் செமிகண்டக்டர் PLI திட்டத்தின் கீழ் சமீபத்தில் 3 மெகா திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதில் 2 திட்டங்கள் டாடா குழுமத்தை சேர்ந்தது.
இந்த 2 செமிகண்டக்டர் திட்டங்கள் டாடா குழுமத்திற்கும் இந்தியாவுக்கும் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. டாடா குழுமம் தென்னிந்திய மாநிலங்களில் தனது செமிகண்டக்டர் ஆலையை அமைக்கத் திட்டமிட்ட நிலையில் தற்போது அசாம் மற்றும் குஜராத்துக்கு சென்றுள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபலமான மற்றும் மாபெரும் சிப் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Powerchip Semiconductor Manufacturing Corp (PSMC) நிறுவனத்துடன் இணைந்து, குஜராத்தில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு ஆலையை நிறுவவுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.91,000 கோடி ஆகும்.
டாடாவின் இந்த ஆலை, தொழில் துறை மற்றும் பாதுகாப்பு துறை ஆகிய இரண்டிற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனம் செமிகண்டக்டர் ஃபேரிகேஷன் துறையில் அடியெடுத்து வைக்கிறது.
இன்று செமிகண்டக்டர் சிப்-கள் டெபிட் கார்டுகள் முதல் மொபைல் போன்கள், வாஷிங் மெஷின்கள் முதல் விமானங்கள், ஏவுகணைகள் முதல் விண்வெளி ராக்கெட்டுகள் வரை அனைத்து மின்னணு சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
அதிகம் மூலதனம் தேவைப்படும் சிப் தயாரிப்பு துறையில் இந்தியாவைக் கவனம் செலுத்த வைக்கும் வகையில், மத்திய அரசு உற்பத்தித்திறன் இணைப்பு ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த திட்டத்தில அரசின் சலுகை பெற பெரும் போட்டி இருந்தது, அதேபோல் முறையான தொழில்நுட்ப கூட்டணி இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. இதில் தோல்வி அடைந்த ஒரு நிறுவனம் தான் பாக்ஸ்கான் - வேதாந்தா கூட்டணி.
அனைத்து துறையிலும், அனைத்து சேவையிலும் பயன்படுத்தும் சிப்-களுக்கு சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளை மட்டுமே சார்ந்திருப்பது பாதுகாப்பு ரீதியாக ஆபத்தானது என்பதால், சொந்தமாக சிப் தயாரிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த புதிய சிப் தயாரிப்பு ஆலைகள், தொழில்நுட்ப சுயசார்பு திசையில் இந்தியாவின் புதிய பயணத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த வாரம் தெரிவித்தார்.
டாடா குழுமத்தின் இந்த முயற்சி, இந்தியாவின் சிப் தயாரிப்பு கனவை நனவாக்குவதற்கான முதல் படியாகும். இதன் மூலம், இந்தியா எதிர்காலத்தில் உலகளவில் சிப் தயாரிப்பில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications