டாடா நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி மையங்களை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை தீவிர படுத்தியுள்ளது.
அந்த வகையில் டாடா குழும தலைவர்களை சந்தித்து ஆந்திராவில் தொழில்களை தொடங்க வருமாறு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என். சந்திரசேகரன் அமராவதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.

மாநில தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஆந்திர பிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் எந்தெந்த துறைகளில் எல்லாம் அரசும் டாடா நிறுவனமும் இணைந்து செயல்படலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாம்.
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் சந்திரபாபு நாயுடு, டாடா நிறுவன தலைவர் திரு என் சந்திரசேகரன் அவர்களை சந்தித்தேன் அமராவதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது என கூறியுள்ளார். ரத்தன் டாடா குறித்தும் அவருடைய நினைவுகள் குறித்தும் நாங்கள் பேசினோம்.
இந்தியாவின் முன்னேற்றத்தில் ரத்தன் டாடாவின் பங்கு குறிப்பாக தொழில்துறையில் அவர் எந்த அளவிற்கு முக்கிய பங்காற்றினார் என்பதையும் அப்போது நாங்கள் பேசினோம் என்றார்.
ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரத்தன் டாடாவும் மிகச்சிறந்த பங்களிப்பை தந்திருக்கிறார் என சந்திரபாபு நாயுடு அதில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆந்திர மாநில வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பாளராக டாடா குழுமம் திகழ்ந்து வருகிறது என பெருமிதம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் சார்பாக விசாகப்பட்டினத்தில் புதிய ஐடி மையம் திறக்கப்பட உள்ளது என கூறினார். இதன் மூலம் விசாகப்பட்டினத்தில் 10,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஐடி ரீதியாக இந்த பிராந்தியம் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்தார்.
மேலும் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக டாடா குழுமத்திற்கு சொந்தமான இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனங்கள் சார்பாக மிகப்பெரிய ஒரு பன்னாட்டு அரங்கமும் 20 ஹோட்டல்களும் நிறுவப்பட உள்ளது என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
டாடா பவர் நிறுவனம் சார்பாக ஆந்திர மாநிலத்தில் 5 கிகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக 40,000 கோடி ரூபாயை டாடா பவர் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications