நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில ஒன்றான டாடா குழுமம் உப்பு, காபி, சாப்ட்வேர்,பேஷன், ஹோட்டல் என பல்வேறு துறைகளின் வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுமத்தின் கீழ் பல துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்டவை.
தற்போது ரூ.10,000 கோடி சந்தை கிளப்பில் புதிதாக இணைந்த டாடா குழும நிறுவனங்களில் ஒன்று டிரெண்ட். டாடா குழுமத்தின் சில்லரை விற்பனை நிறுவனம் என்ற அளவில்தான் இந்த நிறுவனத்தை பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், வெஸ்ட்சைட், லேண்ட்மார்க் மற்றும் பிற பிராண்டுகளை இந்தியாவின் இயக்கும் ஒரு சில்லரை விற்பனை நிறுவனமாகும்.

டிரெண்ட் நிறுவனம் தற்போது டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் சகோதரர் (மாற்றந்தாய் மகன்) நோயல் டாடா தலைமையில் செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்த பெண்மணி ஒருவர் இந்த ரூ.10,000 கோடி நிறுவனத்தின் தலைவராக இருந்தார் என்பதை பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பெண்மணி சிமோன் டாடா.
இவர் ரத்தன் டாடாவின் அப்பா நேவல் ஹோர்முஸ்ஜி டாடாவின் இரண்டாவது மனைவி அதாவது ரத்தன் டாடாவுக்கு சித்தி. ரத்தன் டாடாவுக்கு 10 வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர்களான நேவல் ஹோர்முஸ்ஜி டாடா-சோனி டாடா பிரிந்தனர். இது நடந்து பல ஆண்டுகள் கழித்துதான் நேவல் டாடாவின் வாழ்க்கைக்குள் சிமோன் வந்தார். இவர் இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்து பின்னர் டாடா குழுமத்தில் இணைந்தவர். இவரது வாழ்க்கை பயணத்தை கொஞ்சம் பார்ப்போம்.
ஜெனீவாவில் பிறந்து வளர்ந்தவர் சிமோன். இவர் தனது 23 வயதில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்தார். அப்போது ரத்தன் டாடாவின் தந்தையான நேவல் ஹோர்முஸ்ஜி டாடாவை சந்தித்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகள் ஒன்றாக கழித்தனர்.
பின்னர் 1955ல் நாவல் ஹோர்முஸ்ஜி டாடாவை அவர் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து அவர் இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் நிரந்தரமாக குடியேறினார். 1957ல் இவர்களுக்கு நோயல் டாடா பிறந்தார். நோயல் பிறந்த சில ஆண்டுகள் கழித்து சிமோன் டாடா 1962ல் டாடா ஆயில் மில்ஸின் சிறிய துணை நிறுவனமான லக்மேயில் சேர்ந்தார்.
அந்த நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு நிறுவனத்தின் தலைவராக அவர் உயர்ந்தார். லக்மேயின் வெற்றியை தொடர்ந்து, 1989ல் டாடா இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர்கள் குழுவில் சிமோன் நியமிக்கப்பட்டார். 8 ஆண்டுகளில் லக்மே நிறுவனத்தை ஒரு பெரிய அழகுசாதன பொருட்கள் பிராண்டாக மாற்றிய பிறகு, 1996ல் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்துக்கு லக்மே நிறுவனத்தை டாடா விற்பனை செய்தது.
பின்னர் டாடா குழுமம் லக்மே நிறுவனத்தை விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தை கொண்டு டிரெண்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கியது. லக்மே விற்பனைக்கு பிறகு, பங்குதாரர்களுக்கு டிரெண்ட் நிறுவனத்தில் சமமான பங்குகள் வழங்கப்பட்டன. சிமோன் டாடா 2006 அக்டோபர் 30 வரை டிரெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகமற்ற தலைவராக பணியாற்றினார்.


Click it and Unblock the Notifications