உப்பு முதல் சாப்ட்வேர் வரையிலான வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா குழுமத்தை சேர்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பொதுவாகவே அதிகப்படியான ஆர்வம் காட்டுவார்கள். கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தையில் ஸ்மால்கேப் பிரிவில் டாடா குழுமத்தை சேர்ந்த ஒரு பங்கு முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் ஹோட்டல் துறையை சேர்ந்த அந்த பங்கின் விலை தான். தற்போது ஒரு பங்கின் விலை ரூ.11,000க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. டாடா குழும நிறுவன பங்குகளில் அதிக விலையுயர்ந்த பங்காக அந்த ஸ்மால்கேப் பங்கு உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த அந்த பங்கு பெனாரஸ் ஹோட்டல்ஸ்.

சமீபத்தில் ஐடிசி தனது ஹோட்டல் வர்த்தகத்தை தனியாக பிரித்து பட்டியலிட்டதை தொடர்ந்து இந்தியாவில் அனைத்து ஹோட்டல் பங்குகளும் முதலீட்டாளர்களின் பார்வையை பெற்றது. இப்படி தான் இந்த பெனாரஸ் ஹோட்டல்ஸ் பங்குகளும்.
1971ல் தொடங்கப்பட்ட நிறுவனம் பெனாரஸ் ஹோட்டல்ஸ். இந்நிறுவனம் 2011ல் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (ஐஎச்சிஎல்) துணை நிறுவனமானது. இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி என்பது டாடா குழுமத்தின் ஹோட்டல் பிரிவாகும்.
இந்நிறுவனத்தில் 49.53 சதவீத பங்கு மூலதனத்தை ஐஎச்சிஎல் கொண்டுள்ளது. பெனாரஸ் ஹோட்டல்ஸ் வாரணாசியில் தாஜ் கங்கல் நடேசர் அரண்மனை மற்றும் மகாராஷ்டிராவின் கோண்டியாவில் உள்ள ஜிஞ்சர் ஹோட்டல் போன்ற அதன் ஹோட்டல்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது.
அண்மையில் பெனாரஸ் ஹோட்டல்ஸ் தனது டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து அதன் பங்கு விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.11,800ஐ எட்டியது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.11,100ஆக இருந்தது.
பெனாரஸ் ஹோட்டல்ஸ் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர வருவாயாக ரூ.38.87 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 15.64 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13.56 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 19.96 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பங்குதாரர்களுக்கு தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி வருகிறது. கடைசியாக 2024 ஆகஸ்ட் 25ம் தேதியன்று தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்கியது. அதற்கு முன் 2023,2022,2020 மற்றும் 2019ம் ஆண்டுகளிலும் இந்நிறுவனம் டிவிடெண்ட் வழங்கி இருந்தது.
பெனாரஸ் ஹோட்டல்ஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 40.98 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கின் விலை 12.33 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 3 வருடத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 467.62 சதவீதம் பெருக்கியுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் கடந்த டிசம்பர் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததையடுத்து பங்கின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications