இந்தியா ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் சீனாவுக்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு இருக்கும் வேளையில் அமெரிக்கா சீனா மத்தியிலான வர்த்தகப் போர் மூலம் பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியா வந்தது.
அப்படி இந்தியா வந்த முக்கியமான நிறுவனங்களில் ஒன்று தான் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணி நிறுவனமான விஸ்ட்ரான் கார்ப், இது இந்தியாவில் ஆப்பிள் பொருட்களைத் தயாரிக்கும் டாப் 3 உற்பத்தி கூட்டணிகளில் முக்கியமானவை.
இந்த நிலையில் விஸ்ட்ரான் நிறுவனத்தின் கர்நாடக தொழிற்சாலையை மொத்தமாக டாடா வாங்குவதற்குத் திட்டம் போட்டு வருகிறது.

சீனா
சீனாவின் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியிலான பிரச்சனை, ஜீரோ கோவிட் பாலிசி ஆகியவற்றின் மூலம் ஆப்பிள் தயாரிப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், ஆப்பிள்-ன் அமெரிக்க நிர்வாகம் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

பாக்ஸ்கான் தொழிற்சாலை
குறிப்பாகச் சீன பாக்ஸ்கான் தொழிற்சாலை பிரச்சனைக்குப் பின்பு இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் பாக்ஸ்கான் தயாரித்து வருகிறது.

கர்நாடகா
கர்நாடகாவில் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் இயங்கி வரும் விஸ்ட்ரான் தொழிற்சாலையை மொத்தமாக டாடா குழுமம் 4000 - 5000 கோடி ரூபாய் மதிப்பிற்கு வாங்கி ஐபோன் உற்பத்தியை வேகப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக டாடா குழுமத்தின் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் விஸ்ட்ரான் இந்தியா உடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ்
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே ஓசூரில் பிரம்மாண்டமான தொழிற்சாலையைக் கட்டி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் விஸ்ட்ரான் தொழிற்சாலையை வாங்குவது என்பது பெரும் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

என் சந்திரசேகரன் கனவு
இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி அடைந்துவிட்டால் டாடா எலக்ட்ரானிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் precision engineering பிரிவில் சிறந்து விளங்குவது மட்டும் அல்லாமல் இந்தியாவில் முன்னணி மொபைல் போன் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு பிரிவில் முன்னோடியாக விளங்க வேண்டும் என்ற டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் அவர்களின் இலக்கை விரைவாக எட்ட முடியும்.

ஐபோன் உதிரிப்பாகங்கள்
டாடா எலக்ட்ரானிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்கனவே ஐபோன் உதிரிப்பாகங்களுக்கான முக்கிய வென்டார் ஆக உள்ளது, இதோடு பல கொரியா மற்றும் ஜப்பான் நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கான உதிரிப் பாகங்களைச் சப்ளை செய்து வருகிறது.

விஸ்ட்ரான் தொழிற்சாலை
விஸ்ட்ரான் தற்போது கர்நாடக மாநிலத்தின் நரசபூரா பகுதியில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை வைத்துள்ளது, இந்தத் தொழிற்சாலையை மொத்தமாக 5000 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற முடியாத பட்சத்தில் டாடா எலக்ட்ரானிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விஸ்ட்ரான் இந்தியா உடன் கூட்டணி முறையில் இந்தியாவில் இயங்க துவங்கும்.

டாடா நிர்வாகம்
அதாவது டாடா நிர்வாகம் மொத்த தொழிற்சாலையும் இயங்கும் விஸ்ட்ரான் சிறிய அளவிலான பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆப்பிள் எகோசிஸ்டத்தில் பங்கு வகிக்கும்.

பாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான்
இந்தியாவில் ஆப்பிள் பொருட்களைப் பாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகியவை ஒப்பந்த முறையில் தயாரிக்கிறது. இந்தியாவில் தற்போது iPhone SE, ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 ஆகிய மாடலின் பேசிக் போன்களை மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து Pro மாடல்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.