குஜராத்: டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் இணைந்து கூடிய விரைவில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளன. டாடா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் தான் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள்.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவி எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டில் டாடா மோட்டோர்ஸ் நிர்வாகம் ஜாகுவார் லேண்ட்ரோவர் தொழிற்சாலையை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராக செயல்படும் நடராஜன் சந்திரசேகரன் ஆட்டோ கார் இந்தியாவிற்கு அளித்துள்ள தகவலில் ஜாகுவார் லேண்ட்ரோவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஒரே தளத்தில் இரண்டு வித்தியாசமான மாடல்களை உற்பத்தி செய்யப் போகின்றன எனக் கூறியுள்ளார்.
அதாவது குஜராத் மாநிலத்தில் உள்ள சனாந்த் பகுதியில் இந்த உற்பத்தி ஆலை நிறுவப்படுகிறது. இங்கே எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. அடுத்த 12 மாதங்களுக்குள் இதனை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
டாட்டா குழுமத்தை பொறுத்தவரை ஜாக்குவார் லேண்ட்ரோவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து பெரிய அளவில் தொழிலை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் வடிவமைப்பு மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வளவு பெரிய திட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமே தனியாக செயல்படுவது சரியாக இருக்காது என்பதால் தான் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தையும் இணைத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக குஜராத் மாநிலத்தில் சனாந்த் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலையை பயன்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே டாடா நிறுவனம் இந்த ஆலையில் தான் பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும் என டாடா குழுமம் கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக பேட்டரி தயாரிப்பு மட்டுமின்றி துறைமுக வசதியும் இருப்பதால் குஜராத் மாநிலம் தான் பெரும்பாலும் இதற்கு தேர்வு செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
அதே வேளையில் தமிழ்நாட்டிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாக்குவார் லேண்ட்ரோவர் ஆலையை அமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாக்குவார் லேண்ட்ரோவர் ஆகிய நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செலவின மூலதனமாக 1.5 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளன. இதில் பெரும்பாலான தொகை எலக்ட்ரிக் வாகன பிரிவுக்கு ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications