இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவெடுத்து வரும் டாடா மோட்டார்ஸ், குறிப்பாக எலக்ட்ரிக் வாகன சந்தையில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. டாடா மோட்டாராஸ் 2.0 பயணத்தில் எப்போதும் ஏறுமுகம் தான் என்பதற்கு ஏற்ப ஜூன் காலாண்டில் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் சந்தை கணிப்புகளை தாண்டி 3203 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே ஜூன் காலாண்டில் 5,007 கோடி ரூபாய் நஷ்டத்தை பதிவு செய்திருந்தது யாராலும் மறக்க முடியாது.

இந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 42 சதவீதம் அதிகரித்து 1.02 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, ஆப்ரேட்டிங் லாபம் வருடாந்திர அடிப்படையில் 5 மடங்கு அதிகரித்து 13,218 கோடி ரூபாயாக உள்ளது. ஆப்ரேட்டிங் மார்ஜின் தடாலடியாக 7 சதவீதம் அதிகரித்து 14.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் டாடா மோட்டார்ஸ் கீழ் இயங்கும் பிரிட்டன் ஆடம்பர பிராண்டான ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் ஜூன் காலாண்டில் மொத்த வருமானம் 57 சதவீதம் அதிகரித்து 6.9 பில்லியன் பவண்ட் ஸ்டெர்லிங்க்-ஐ பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் லாபம் பெற முடியாமல் நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில், வரிக்கு முந்தைய லாப அளவீட்டில் 435 மில்லியன் பவுன்ட் ஸ்டெர்லிங்க்-ஐ பெற்றுள்ளது.
ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விற்பனை மூலம் வருவாய் 4.4 சதவீதம் அதிகரித்து 17000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு வர்த்தக வாகனங்களின் விற்பனை 14.4 சதவீதம் சரிவு, ஏற்றுமதியில் 32% சரிவு ஆனால் வருவாய் அளவீட்டில் உயர்ந்துள்ளது.
இதேபோல் பயணிகள் வாகனங்களின் வர்த்தகம் மூலம் இப்பிரிவின் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 0.8 சதவீதம் அதிகரித்து 5.3 சதவீதமாக வருடாந்திர அடிப்படையில் உயர்ந்துள்ளது. உள்நாட்டு விற்பனை 7.6 சதவீதம் அதிகரித்துள்ளது, எலக்ட்ரிக் வாகனங்கள் 19000 ஆக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications