சென்னை: இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது எலக்ட்ரிக் கார் தயாரிப்பில், பேட்டரி தொடர்பான பிரச்சனைகளைச் சரி செய்ய, சீனாவின் ஒக்டில்லியன் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடமிருந்து பேட்டரி பேக்குகளை வாங்கப்போகிறது என லைவ் மிண்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் சுமார் 60%க்கும் அதிகமான வர்த்தகத்தை வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸ், தனது பேட்டரி செயல்திறன் பிரச்சனைகளை சரிசெய்வதற்கும், தனது சப்ளை மற்றும் தொழில்நுட்ப தளத்தை பன்முகப்படுத்தவும் சீன நிறுவனத்திடமிருந்து பேட்டரிகளைப் வாங்கப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் தற்போது டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடமிருந்து தனது கார்களுக்கான பேட்டரிகளைப் பெற்று வருகிறது. டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் இந்தியா மற்றும் உலக நாடுகளில் சுமார் 51 உற்பத்தி தளத்தை வைத்துள்ளது.
ஆனாலும் இந்த பேட்டரி பேக்குகள் டாடா மோட்டார்ஸ் எதிர்பார்க்கும் செயல்திறனைக் கொடுப்பது இல்லை. இதன் எதிரொலியாகச் சீனாவில் இருந்து பேட்டரி பேக்குகளை வாங்குகிறகு டாடா மோட்டார்ஸ். உலகளவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும், அதன் தொழில்நுட்பத்திலும் முன்னோடியாக இருக்கிறது சீனா.
டாடா மோட்டார்ஸ் தற்போது இந்தியாவில் டியாகோ, டிகார், பஞ்ச், நெக்ஸான் மற்றும் புதிதாக அறிமுகமான கர்வ்.ஈவி ஆகியவற்றின் எலக்ட்ரிக் கார்களை விற்கிறது. விரைவில் டாடா ஹாரியர் காரின் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்த கர்வ்.ஈவி காரில் தான் முதல் முறையாக ஒக்டில்லியன் பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் டாப் 10 அதிக மதிப்புடைய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வரிசையில் நுழைந்த முதல் இந்திய நிறுவனம் டாடா மோட்டார்ஸ் தான். டாடா மோட்டார்ஸின் பங்கு இந்த ஆண்டு 50%க்கும் மேலாக உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 101%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 51 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தியாவில் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்குகிறது.
டெஸ்லா இன்க் தற்போது உலகின் அதிக மதிப்புடைய ஆட்டோமொபைல் நிறுவனமாக உள்ளது. இதன் சந்தை மூலதனம் 711.19 பில்லியன் டாலர்கள். அதைத் தொடர்ந்து 307.50 பில்லியன் டாலர் மதிப்புடன் டொயோட்டா மோட்டார்ஸ் மற்றும் 92.65 பில்லியன் டாலர் மதிப்புடன் BYD நிறுவனம் உள்ளன.


Click it and Unblock the Notifications