சென்னை: 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை உறுதியாக்கியுள்ளது. NDA கூட்டணியில் பிஜேபி பெரும்பான்மையாக இல்லாத பட்சத்தில் சந்திரபாபு நாயடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் பிஜேபி ஆட்சி அமைக்கிறது.
இந்த தேர்தலில் சந்திரபாபு நாயடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் தான் கேம் சேஞ்சர், கிங் மேக்கர் என எல்லா புகழுக்கும் சொந்தக்காரர் ஆவார். இவ்விருவரின் கூட்டணி இல்லையெனில் பிஜேபி ஆட்சி அமைக்க முடியாது. இதனால் இவர்கள் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என நிலையில் ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

இப்படி அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் வேளையில் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று எப்படி இருக்கும் என்ற பீதியில் மக்கள் உள்ளனர். இதேவேளையில் புதிய ஆட்சியில் தொழிற்துறை எப்படி இருக்கும் என்ற அச்சத்தில் கார்ப்ரேட் நிறுவனங்கள் உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் டாடா குழுமம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு தொழிற்துறையை ஊக்கப்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில், வணிக வாகன (CV) பிரிவைத் தனியாகப் பிரித்துத் தனி நிறுவனமாக இயக்க ஒரு தனி துணை நிறுவனத்தை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நிறுவனத்திற்கு டிஎம்எல் கமர்சியல் வெஹிக்கல் லிமிடெட் (TML Commercial Vehicles Ltd - TMLCVL) என்று பெயரிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.
இது குறித்து நிறுவனம் பங்குச்சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில், "புதிதாக உருவாக்கப்படும் நிறுவனம், டாடா மோட்டார்ஸ்-ன் முழுக்க முழுக்க சொந்த துணை நிறுவனமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இப்புதிய கிளை நிறுவனத்தில் யாருடைய பங்கீடும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் வளர்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், டாடா மோட்டார்ஸ் தனது வணிக வாகன மற்றும் பயணிகள் வாகன பிரிவுகளை இரண்டு தனித்தனி நிறுவனமாகப் பிரித்து, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக மாற்றும் திட்டத்தை அறிவித்திருந்தது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வாகன வணிகம் மற்றும் அதை தொடர்புடைய முதலீடுகள் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்படும். அதே நேரத்தில் பயணிகள் வாகன பிரிவில் ICE இன்ஜின், எலக்ட்ரிக் வாகனங்கள், Jaguar Land Rover மற்றும் அதைத் தொடர்புடைய முதலீடுகள் தனி நிறுவனமாகப் பிரிக்கப்பட்டுப் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றப்படும்.
இந்த பிரிவின் தனித்தனி செயல்பாடுகள் மூலம், வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை தனித்தனியாக மதிப்பீடு செய்து, லாபகரமாகச் செயல்படுத்துவதற்கு இந்த பிரிப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு மூலம் இன்று டாடா மோட்டார்ஸ் பங்குகள் மீது புதிய முதலீடுகள் குவிந்து அதன் பங்குகள் உயரும் என கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications