மும்பை: டாடா மோட்டார்ஸ் நிறுவன உணவகத்தில் வழங்கப்பட்ட சமோசாவில் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்கள் இருந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே அருகே பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் கேண்டீன் செயல்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 27ஆம் தேதி இந்த கேண்டீனில் வழங்கப்பட்ட சமோசாவிற்குள் ஆணுறை, கற்கள் மற்றும் குட்கா போன்றவை இருந்தது ஊழியர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டாடா மோட்டார்ஸ் ஆலையில் உள்ள கேண்டீனை ஒப்பந்த அடிப்படையில் கேட்டலிஸ்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் சமோசா உள்ளிட்ட உணவுகளை வேறு நிறுவனத்திடம் இருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறது. அப்படி , மனோகர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வழங்கிய சமோசாக்களில் தான் ஆணுறை, கற்கள், குட்கா ஆகியவை இருந்தது தெரிய வந்துள்ளது.
மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவன ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பிரோ ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சமோசாவிற்குள் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்களை வைத்து வைத்து கொடுத்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏற்கனவே இந்த கேண்டீனுக்கு ஒரு எஸ்ஆர்ஏ என்ற நிறுவனம் சமோசா வழங்கி வந்துள்ளது. ஆனால் அதன் தரம் குறித்து புகார் எழுந்ததால் அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு , புதிதாக மனோகர் எண்டர்பிரைசஸிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதனால் எஸ்ஆர்ஏ நிறுவன ஊழியர்கள் மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவன ஊழியர்களுக்கு பணம் கொடுத்து இவ்வாறு செய்ய சொன்னது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எஸ்ஆர்ஏ என்டர்பிரைசஸ் நிறுவனம் வழங்கிய சமோசாவினுள் பேண்டேஜ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நிறுவனத்தின் ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் தூண்டுதலால் மீண்டும் இது போன்ற செயல் நடந்திருப்பதாகவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications