இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நாட்டின் முன்னணி கார் விற்பனை நிறுவனமாக உருவெடுக்கவும், இந்த வளர்ச்சி பாதையில் அதன் முதலீட்டாளர்களுக்கும், தனது நிறுவன மதிப்பையும் அதிகரிக்கக் கனரக வாகன பிரிவை ஒரு நிறுவனமாகவும், பயணிகள் வாகன பிரிவை ஒரு நிறுவனமாகவும் பிரித்து தனித்தனியாகப் பட்டியலிடப்படத் திட்டமிட்டு வருகிறது.
இதை செயல்படுத்த டாடா மோட்டார்ஸ் தனது கட்டமைப்பை எளிதாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதேவேளையில் டாடா குழுமத்தின் மற்றொரு பிரிவான டாடா கேப்பிடல் நிறுவனமும் ஐபிஓ வெளியிடத் தயாராகி வருகிறது.

இதில் முக்கிய பணியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் வாகன நிதி சேவை பிரிவான டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தை, டாடா கேப்பிட்டலுடன் இணைக்க முடிவு செய்துள்ளது. இது கிட்டதட்ட ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்ற கணக்கில் நடக்கிறது.
இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் வேகமாக வளர்வது மட்டும் அல்லாமல் டாடா கேப்பிட்டலுக்கு புதிய வளர்ச்சி பிரிவாக விளங்கும் வாய்ப்பை டாடா சன்ஸ் நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இது மட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ்-ன் கடன் சுமையைக் குறைப்பதற்கு இது முக்கியமானதாக உள்ளது இத்தகைய மறுசீரமைப்பு நடவடிக்கை.
டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ்-ஐ டாடா கேப்பிட்டல் உடன் இணைக்க பங்கு பரிமாற்ற ஒப்பந்தம் (Share-Swap Agreement) மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், டாடா மோட்டார்ஸ்-க்கு டாடா கேப்பிட்டல் பங்குகளை வழங்கும்.
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ்-ல் இனி டாடா கேப்பிட்டல் சிறுபான்மை பங்கு உரிமையாளராக விளங்கும். டாடா கேப்பிட்டல் என்பது டாடா சன்ஸ்-ன் 95% பங்குகளை கொண்டு இயங்கும் ஒரு கிளை நிறுவனமாகும். மேலும் டாடா குழுமத்தின் முதன்மை நிதி சேவை நிறுவனமாகும்.
டாடா கேப்பிட்டல் நிறுவனம் கமர்சியல் பைனான்ஸ், நுகர்வோர் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், தனிப்பட்ட கடன் மற்றும் கார் கடன்கள் போன்றவற்றை வழங்குகிறது. மேலும், சொத்து மீதான கடன்கள், செல்வ மேலாண்மை சேவைகள், தனியார் ஈக்விட்டி முதலீடுகள், டாடா கார்டுகள் விநியோகம் மற்றும் மார்கெட்டிங் ஆகிய பணிகளையும், சேவைகளையும் வழங்குகிறது.
இந்த பங்கு பரிமாற்றம் மூலம் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரையில் மதிப்பிடப்பட்டு உள்ளது. இது நிறுவனத்தின் 2023 நிதியாண்டின் அதன் புத்தக மதிப்பான ரூ.5,625 கோடியில் இருந்து சுமார் 2.6 - 3.5 மடங்கு அதிக மதிப்பீடாகும்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு செயல்பாட்டில் பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனம், டாடா மோட்டார்ஸுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
டாடா கேப்பிட்டலை பொறுத்தவரை, இந்த இணைப்பு 2024-25 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள ஐபிஓ-வுக்கு முன்னதாக, குழுமத்தின் நிதி சேவை பிரிவுகள் அனைத்தையும் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டு வருவதற்கான பணியாகும்.


Click it and Unblock the Notifications