2020ஆம் ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது. கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாகக் கார், பைக், மற்றும் விவசாய வாகனங்களின் விற்பனை முடங்கியது மட்டும் அல்லாமல் உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடுமையான வர்த்தகம் சரிவை எதிர்கொண்டு, பெருமளவிலான வேலைவாய்ப்புகளை இழந்தது. ஆனால் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்ட பின் உற்பத்தி பணிகளை வேகம் அடைந்த அதேவேளையில், ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகச் சந்தையைக் குஷிப்படுத்தும் விதமாகப் பண்டிகை கால விற்பனை அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட வர்த்தகச் சரிவுகள் அனைத்தும் டிசம்பர் காலாண்டில் பெருமளவில் மீண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ்
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் உருவான சிறப்பான வர்த்தகச் சூழ்நிலையில் அதிகளவிலான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்றது. இதன் மூலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இக்காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் 67 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜாகுவார், லேண்டு ரோவர்
ஜாகுவார், லேண்டு ரோவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் வர்த்தகத்தையும் சேர்த்து இந்நிறுவனத்தின் லாப அளவு 2,906 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,738 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் ஜாகுவார் விற்பனை அமோகம்
சீனாவில் ஜாகுவார் நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த ஆண்டை விடவும் சுமார் 19.1 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் உலகளாவிய விற்பனையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் குறைவாகவே உள்ளது. முக்கியமாகப் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தையில் கொரோனா தொற்று முழுமையாக மீண்டு வராத நிலையில் ஜாகுவார் பிரிவு வர்த்தகம் சற்று குறைவாகவே டிசம்பர் காலாண்டில் பதிவாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் வருமானம்
இதேவேளையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருமானத்தின் அளவு 75,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ் 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொத்த வர்த்தகப் பாதிப்பைப் பெரிய அளவில் குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications