இந்திய விண்வெளி துறையில் புதிய மைல்கல் சாதனை படைக்கப்பட்டு உள்ளது, முதல் முறையாகத் தனியார் துறை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ராணுவ தர நிலப்பட செயற்கோள் (Military Grade Geospatial Satellite) வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்புத் துறை புதிய வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல துவங்கியுள்ளது.
இந்த உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கர்நாடகாவில் உள்ள வேமகல் (Vemagal) என்ற இடத்தில் அமைந்துள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

“TSAT-1A” என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் “பேண்ட்வேகன்-1” (Bandwagon-1) விண்வெளி திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா-வில் இருந்து விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.
டாடா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த TSAT-1A செயற்கைக்கோள் என்பது துல்லியமான படங்கள் வழங்கும் புதிய தலைமுறை செயற்கைக்கோள் ஆகும். இது ஒரு “சப் மீட்டர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் செயற்கைக்கோள்” (Sub-metre Resolution Imaging Satellite) ஆகும். இதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் ஒரு மீட்டருக்கு குறைவான பிக்சல் (Pixel) திறன் கொண்ட மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களாக இருக்கும்.
இந்த செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் உயர் தரப் படங்கள் இந்திய ராணுவத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். எதிரி நாடுகளின் நிலப்பகுதிகள், அங்குள்ள ராணுவ நடமாட்டங்கள் போன்றவற்றைத் துல்லியமாகக் கண்காணிக்க இயலும். முன்னதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மூலம் ராணுவ உளவு செயற்கைகோள் (Military Spy Satellites) விண்ணுக்குச் செலுத்தப்பட்டிருந்தாலும், தனியார்த் துறையில் இதுவே முதல் முயற்சி.

TASL நிறுவன அதிகாரிகள் கூறுகையில், இந்த செயற்கைக்கோள் தற்போது சரியான சுற்றுப்பாதையில் இருப்பதற்கான சிக்னலை அனுப்பியுள்ளது. மூன்று வாரக் காலத்திற்குள் இதன் மீதான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முழு திறன் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TASL நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சுக்கரண் சிங் கூறுகையில், இது வெறும் முதல் படி தான், இதேபோன்ற செயற்கைக்கோள்களைக் கொண்ட தொகுப்பை (Constellation) எதிர்காலத்தில் விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவர்களது உற்பத்தி நிலையம் ஆண்டுதோறும் 25 லோ எர்த் ஆர்பிட் (LEO) செயற்கைக்கோள்களை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த LEO செயற்கைக்கோள்கள் சாட்லைஜிக் இன்க் என்னும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications