இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா தனது விமான சேவையை பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்து வரும் அதேவேளையில் தனது விமான எண்ணிக்கையை அதிகரித்து புதிய இடங்களுக்கு சேவை அளிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
டாடா குழுமம் ஏர் இந்தியாவை இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக மாற்றும் இலக்குடன் பறந்து வந்தாலும், இதன் இலக்குகளை அடைய போதுமான விமானங்கள் இல்லாதது மூலம் அதிகப்படியான இடங்களுக்கு சேவை அளிக்க முடியாமல் உள்ளது. இதற்காக அடுத்தடுத்து புதிய விமானங்களை வாங்கி வருகிறது.

இதன் அடிப்படையில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா புதிதாக 100 ஏர்பஸ் விமானங்களுக்கான ஆர்டரை முன் வைத்துள்ளது. இந்த கூடுதல் ஆர்டரில் 10 வைட்-பாடி A350 விமானங்கள் மற்றும் 90 நாரோ-பாடி A320 குடும்ப விமானங்கள் அடங்கும்.
இந்த புதிய ஆர்டரில், ஏர் இந்தியாவின் 2023 ஆம் ஆண்டிற்கான மொத்த ஏர்பஸ் ஆர்டர் எண்ணிக்கை 350 விமானங்களாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்டர் செய்யப்பட்ட 250 விமானங்களை தொடர்ந்து தற்போது புதிதாக 100 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது மூலம் மொத்த எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, குறிப்பாக சிறு நகரங்களில் இருந்து விமான சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விமானப் பயணத்திற்கான சேவை அதிகரித்து வருவதை அடிப்படையாக கொண்டு இண்டிகோ, ஏர் இந்தியா ஆகியவை அடுத்தடுத்து புதிய விமானத்தை ஆர்டர் செய்து வருகிறது.
இந்தியாவில் அடுத்த 10-15 வருடத்தில் ரயில் பயணத்தை போல விமான பயணமும் மலிவானதாகவும், எளியவர்களும் பயணிக்க கூடிய தளமாகவும் மாறக்கூடும் என்பதை பல வகையில் கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அடித்தளம் தான் இண்டிகோ, ஏர் இந்தியா ஆகியவை மாறி மாறி விமானங்களை ஆர்டர் செய்வது.
டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவின் தலைவர் என். சந்திரசேகரன் புதிதாக ஆர்டர் செய்யப்பட்டு உள்ள 100 விமானங்கள் குறித்து பேசுகையில், இந்திய விமானப் போக்குவரத்து துறையின் வலுவான வளர்ச்சி சாத்தியக்கூறுகளையும், உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாறுவதற்கான ஏர் இந்தியாவின் இலக்கையும் எடுத்துரைத்தார். கூடுதல் விமானங்கள் ஏர் இந்தியா தனது உலகளாவிய நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும், மேம்படுத்தப்பட்ட பயணிகள் அனுபவத்தை வழங்கவும், இந்தியாவில் அதிகரித்து வரும் விமானப் பயணத்திற்கான தேவையை பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் என தெரிவித்தார்.
ஏர் இந்தியாவில் அதிகரித்துவரும் A350 விமானங்களை பராமரித்து இயக்குவதற்கு ஆதரவாக, ஏர் இந்தியா ஏர்பஸ்ஸின் ஃப்ளைட் ஹவர் சர்வீசஸ்-கம்போனென்ட் (FHS-C) தேவையை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த விரிவான பராமரிப்பு மற்றும் பொருட்கள் தொடர்பான ஒப்பந்தம் A350 விமானத்தின் சிறந்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் எனவும் டாடா குழுமம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications