தொழில்நுட்ப புரட்சி மற்றும் மக்கள்தொகை பெருக்கம் போன்ற காரணங்களால் நம் நாட்டில் கிராமங்கள் நகரங்களாவும், நகரங்கள் பெருநகரங்களாகவும் வளர்ச்சி கண்டு வருகின்றன. இதனால் நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மின்சார உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடுமையான ஒழுங்குமுறைகளை கொண்ட அணுசக்தி துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் பிப்ரவரி 1ம் தேதியன்று தாக்கல் செய்த எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், அணுசக்தியை நிர்வகிக்கும் முக்கிய சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைக்க தொடங்கியுள்ளது.
உப்பு முதல் சாப்ட்வேர் வரையிலான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் டாடா குழுமம் அணுமின் உற்பத்தியில் களம் இறங்க விருப்பம் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த டாடா பவர் நிறுவனம் சிறிய மாடுலர் அணு உலைகள் அமைக்கும் யோசனையை வெளிப்படுத்தியுள்ளது.
டாடா பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீர் சின்ஹா கூறுகையில், அணுமின் உற்பத்தி திட்டங்கள் உலகளவில் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக அவற்றை நாட்டில் விரைவாக செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.
சிறிய மாடுலர் அணு உலைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான செயல்முறை கடுமையானது. பொதுவாக ஒப்புதல் பெற 24 மாதங்கள் ஆகும். அதை தொடர்ந்து அணுஉலைகள் கட்டுமானத்துக்கு கூடுதலாக 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். ஒழுங்குமுறை தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்துக்கு அணுசக்தி மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
டாடா பவர் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.977.92 கோடி சம்பாதித்துள்ளது. மேலும் அதே காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.5,731 கோடி ஈட்டியுள்ளது.நல்ல லாபம் ஈட்டி வரும் டாடா குழும நிறுவனங்களில் டாடா பவர் நிறுவனமும் ஒன்று.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே டாடா பவர் நிறுவன பங்கின் விலை 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.371.20ஐ எட்டியது. இந்தியா தற்போது தோரயமாக 8 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. 20232ம் ஆண்டுக்குள் இதனை 20 ஜிகாவாட்டாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications