இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜியமான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் தலைவராக அசத்தி வரும் தமிழரான என்.சந்திரசேகரன் அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானர்" (நைட் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்) வழங்கப்பட்டு உள்ளது.
செவாலியர் விருதை என்.சந்திரசேகரன் அவர்களுக்கு ஐரோப்பாவுக்கான பிரான்ஸ் அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான கேத்தரின் கொலோனா வழங்கினார்.

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே வர்த்தகத்தை வலுப்படுத்தியதிலும், மேம்படுத்தியதிலும் செய்த பங்களிப்புக்காக என் சந்திரசேகரன் அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதான செவாலியர் விருது வழங்கப்பட்டது.
பிரான்ஸ் அரசு வெளிநாட்டவர்கள் பிரிவில் பலருக்கும் செவாலியர் விருது வழங்கியுள்ளது, இந்தியாவில் முதன்முதலில் இவ்விருதை பெற்றவர் 1896 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தை சேர்ந்த துர்கா சாரன் ரக்ஷித், இதை தொடர்ந்து 1937ல் பிரென்ச் இந்தியாவில் பாண்டிச்சேரி-யின் துணை மேயரான முகமதி ஹனிப்-க்கு கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 1995ல் சிவாஜி கணேசன், சூரரைப் போற்று படம் உருவாக காரணமான ஏர் டெக்கான் தலைவர் ஜி.ஆர்.கோபிநாத், காட்ரிஜி இண்டஸ்ட்ரீஸ் தலைவர் நதீர் காட்ரிஜ், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், 2016ல் கமல்ஹாசன், 2018ல் அசிம் பிரேம்ஜி, 2022ல் சசி தரூர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
கடந்த வருடம் தான் என் சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவராக 5 ஆண்டுகள் பொறுப்பு நீட்டிக்கப்பட்டது. தொழிற்துறையின் மத்தியில் சந்திரா என்று அழைக்கப்படும் சந்திரசேகரன், 2017 முதல் டாடா சன்ஸ் தலைவராக உள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கோகனூரில் பிறந்து வளர்ந்த என் சந்திரசேகரன்
திருச்சியின் அரசு பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் பட்டம் பெற்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் Graduate Trainee ஆக 1987 இல் இணைந்தார்.
20 வருடத்திற்கும் அதிகமாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றியது மட்டும் அல்லாமல் உயர்மட்ட பதவிக்கு உயர்ந்தார். 2009 டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்த சந்திரசேகரன் 2017 வரை எட்டு ஆண்டுகள் TCS CEO மற்றும் MD ஆக பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து தான் சந்திரசேகரன் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 2016 முதல் 2022 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் குழுவிலும் பணியாற்றியுள்ளார் சந்திரசேகரன்.


Click it and Unblock the Notifications