சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களான ரிலையன்ஸ், அதானி, பிர்லா, போன்றவை தொடர்ந்து வர்த்தக விரிவாக்கத்திற்காக பெரும் தொகையை முதலீடு செய்து வரும் வேளையில், டாடா குழுமம் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் முதலீட்டை மொத்தமாக நிறுத்தியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டாடா குழுமம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதன் முறையாக, தனது ஈகாமர்ஸ் மற்றும் ஒம்னி-சேனல் (online & offline) எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகங்களான டாடா நியூ சூப்பர் ஆப், க்ரோமா, டாடா கிளிக் போன்றவற்றில் புதிய முதலீடுகளை செய்வதை நிறுத்தி வைத்துள்ளது.

பொதுவாக டாடா குழுமம் முதலீடு செய்வதை நிறுத்தாது, ஆனால் ஈகாமர்ஸ் மற்றும் ஒம்னி-சேனல் (online & offline) எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகங்கள் மூலம் பெரும் இழப்பை சந்தித்த காரணத்தால், லாபகரமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காகவும், கொள்கை மற்றும் திட்ட வடிவத்தை மறுசீரமைப்பு செய்யவும், இப்பிரிவின் செயல்பாட்டு திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளது.
டாடா குழுமத்தின் ஈகாமக்ஸ் நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா டிஜிட்டலில் இதுவரை சுமார் ரூ.19,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக டாடா குழும நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் 2024 ஆம் நிதியாண்டில் எவ்விதமான முதலீட்டையும் செய்யவில்லை.
பிஸ்னஸ் இண்டலிஜென்ஸ் தளமான டோஃப்லர் (Tofler) மூலம் பெறப்பட்ட RoC பதிவுகளின் படி, டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனம் 2024ஆம் நிதியாண்டில் டாடா டிஜிட்டலில் எவ்விதமான முதலீட்டையும் செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
டாடா டிஜிட்டல் என்பது டாடா யுனிஸ்டோர் (டாடா கிளிக்-ஐ நிர்வகிக்கும் நிறுவனம்), இன்னோவேட்டிவ் ரீடைல் கான்செப்ட்ஸ் (பிக்பேஸ்கட்), டாடா 1mg ஹெல்த்கேர் சொல்யூஷன்ஸ் மற்றும் 500 க்கும் மேற்பட்ட க்ரோமா பிராண்ட் கடைகளைக் கொண்ட இன்ஃபினிட்டி ரீடைல் ஆகியவற்றின் தாய் நிறுவனமாகும். மேலும், "சூப்பர் ஆப்" என்று அழைக்கப்படும் டாடா நியூ ஆப்-ம் டாடா டிஜிட்டல் கீழ் தான் உள்ளது.
2023 நிதியாண்டில், டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இழப்புகள் அளவு ரூ.4,700 கோடி உள்ளது. 2022 நிதியாண்டின் ரூ.3,130 கோடியில் இருந்து அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications