இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா சன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தில் டாடா குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக முக்கிய புள்ளியாக கருதப்பட்ட ஒரு நபர் நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக இருந்த அனைத்து பங்குகளையும் விற்பனை செய்துள்ளார்.
டாடா குழுமத்தின் தாய் நிறுவனம்தான் டாடா சன்ஸ். டாடா குழுமத்தில் பெரும்பான்மையான பங்குகள் டாடா சன்ஸ் நிறுவனத்திடம் தான் இருக்கின்றன. அதுமட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்பான்மையான நிலங்களை கொண்டிருக்கும் ஒரு குழுமமாகவும் டாடா சன்ஸ் திகழ்ந்து வருகிறது. டாடா குழும நிறுவனங்களின் ப்ரமோட்டராகவும் டாடா சன்ஸ் தான் செயல்பட்டு வருகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை ஏழு அறக்கட்டளை அமைப்புகள் தான் இதில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கின்றன. சர் தொரப்ஜி டாடா அறக்கட்டளை, ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் ஆர்டி டாடா அறக்கட்டளை உள்ளிட்டவை இதில் முக்கியமானவை. அதாவது ஏழு அறக்கட்டளை அமைப்புகள் மொத்தமாக டாடா சன்ஸ் நிறுவனத்தில் 65 சதவீத பங்குகளை சொந்தமாக வைத்து இருக்கின்றன. டாடா குழுமம் என்றாலே டாடா குடும்பத்தினரை தாண்டி பலருக்கும் தெரிந்த பெயர் தான் இஷாத் உசேன்.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் கணிசமான பங்கினை வைத்திருந்த இஷாத் உசேன் அவற்றை முழுமையாக விற்பனை செய்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் 2024 நிலவரத்தின் அடிப்படையில் இஷாத் உசேன் தனக்கு சொந்தமாக வைத்திருந்த 2.05 சதவீத பங்குகளையும் விற்பனை செய்திருக்கிறார்.
2023 மார்ச் மாத நிலவரத்தின்படி உசேன் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 55,000ம் பங்குகளை சொந்தமாக வைத்திருந்தார். தற்போது அவர்கள் அந்த பங்குகளை முழுமையாக விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் பிறந்த இஷாத் உசேன், டாடா சன்ஸ் நிறுவனத்தினரால் நவாப் என அழைக்கப்படுகிறார். அவர் டேராடூனில் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் டெல்லியில் உள்ள செயின் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். அங்கிருந்து ஹார்வேர்டு பிசினஸ் பள்ளிக்கு சென்ற அவர் மேலாண்மை படிப்பை முடித்தார். பின்னர் சார்டர்டு அக்கவுண்டண்டாக பணியாற்றிய அவர் , 1981 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் பணியில் சேர்ந்தார்.
36 ஆண்டுகாலம் டாடா குழுமத்தில் சிறப்பாக பணியாற்றினார். டாடா சன்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்களின் இயக்குனராகவும், வோல்டாஸ் மற்றும் டாடா ஸ்கை நிறுவனங்களின் தலைவராகவும் இவர் செயல்பட்டு வந்தார். இவர் ஜே ஆர் டி டாடா, ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்திரி மற்றும் என் சந்திரசேகரன் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அதாவது டாடா சன்ஸ் நிறுவனத்தின் 4 தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications