மும்பை: ரத்தன் டாடாவுக்கு சொந்தமான ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது . இது தொடர்பாக ரத்தன் டாடா தன்னுடைய உயிலில் எதுவும் குறிப்பிடவில்லை இந்த நிலையில் டாடா குழும நிர்வாகிகள் இது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தலைமையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரத்தன் டாடா எண்டோமென்ட் பவுண்டேஷன் எனப்படும் அறக்கட்டளையை ரத்தன் டாடா நிறுவினார். தன்னுடைய தனிப்பட்ட செல்வம் அனைத்தும் இந்த அறக்கட்டளைக்கு செல்லும் என அப்போது அவர் கூறி இருந்தார். ரத்தன் டாடாவுக்கு டாடா குழுமத்தில் 0.83 சதவீத பங்குகள் உள்ளன. மொத்தமாக இவரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 15,000 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.

இந்த சொத்துக்கள் அனைத்தும் தற்போது இந்த அறக்கட்டளைக்கு தான் செல்ல இருக்கிறது. ஆனால் ரத்தன் டாடா தன்னுடைய உயிலில் இந்த அறக்கட்டளைக்கு அறங்காவலர்கள எவ்வாறு நியமிப்பது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. ரத்தன் டாடாவுக்கு சொந்தமாக இருந்த ஃபெராரி, மசராட்டி உள்ளிட்ட கார்கள் ஏலம் விடப்பட்டு அந்த தொகை இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் யாரெல்லாம் இந்த அறக்கட்டளைக்கு அறங்காவலராக நியமிப்பது என்பது குறித்த எந்த விவரத்தையும் அவர் தன்னுடைய உயிலில் எழுதவில்லை.
தன்னுடைய உயிலை செயல்படுத்தக்கூடிய நபர்கள் என அவர் டாரியஸ் கம்பாட்டா, மெஹ்லி மிஸ்திரி, ஷிரன் மற்றும் தியானா ஆகியோரை நியமனம் செய்துள்ளார். இதில் டாரியஸ் கம்பாட்டா என்பவர் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமான ஒரு வழக்கறிஞர் , ஷிரன் மற்றும் தியானா ஆகிய இருவரும் ரத்தன் டாடாவின் சகோதரிகள் . மிஸ்திரி டாடாவுக்கு நெருக்கமானவர். இவர் ஏற்கனவே ரத்தன் டாடா குழுமத்தின் இரண்டு அறக்கட்டளைகளில் அறங்காவலராக இயங்கி வருகிறார்.
தற்போது இந்த ரத்தன் டாடா எண்டோமென்ட் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளைக்கு யாரெல்லாம் அரங்காவலராக நியமனம் செய்வது, யார் இந்த அறக்கட்டளையை மேற்பார்வையிடுவது, ரத்தன் டாடாவின் சொத்துக்களை யார் இந்த அறகட்டளைக்கு மாற்ற போகிறார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
இந்த குழப்பத்துக்கு டாடா சன்ஸ் நிர்வாகிகள் அல்லது டாடா குடும்பத்தினர் என யார் தீர்வு காண்பது என்ற சந்தகேம் நீடிக்கிறது. ஏனெனில் இந்த அறக்கட்டளை தொடங்கும் போதே இது டாடா சன்ஸின் கீழ் வராது, சுதந்திரமான அறக்கட்டளையாக செயல்படும் என ரத்தன் டாடா கூறி இருந்தார்.
எனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நடுவராக நியமனம் செய்து பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications