கார் உற்பத்தி துறையில் புதிய திருப்பமாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் கூட்டு நிறுவனத்தை அமைத்துள்ளது.
டாடா டெக்னாலஜிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ குழுமம் சேர்ந்து அமைத்துள்ள இந்த கூட்டு நிறுவனம் பிஎம்டபிள்யூ டெக் ஒர்க்ஸ் என அழைக்கப்படும் என இரண்டு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இந்த இரண்டு நிறுவனங்களுமே தலா 50 சதவீத பங்கினை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு நிறுவனம் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளில் இணைந்து செயல்படும் என சொல்லப்படுகிறது.

குறிப்பாக தானியங்கி வாகனங்கள் ,வாகனங்களுக்கான டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் வாகனங்களுக்கான டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றுக்கு தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை இந்த கூட்டு நிறுவனம் நோக்கமாக கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தேவைகளுக்கு ஏற்ப வாகனங்கள் தொழில்நுட்ப ரீதியிலாக மேம்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற தங்களின் நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் பிஎம்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து பிஎம்டபிள்யூ டெக் ஒர்க்ஸ் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கி இருப்பதாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வாரன் ஹேரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது வாகனங்களில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே அதற்கேற்ற வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை பிரிவு தலைவரான நாசிகேட் பராஞ்ச் தெரிவித்துள்ளார்.
தானியங்கி வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான டிஜிட்டல் சேவைகளுக்கு தேவையான மென்பொருள் தீர்வுகளை கொண்டு வருவதில் பிஎம்டபிள்யூ டெக் ஒர்க்ஸ் நிறுவனம் தீவிரமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பிஎம்டபிள்யூ நிறுவன கார்களுக்கு தேவையான பல்வேறு நவீன தொழில்நுட்பங்களும் இந்த கூட்டு நிறுவனத்தின் மூலம் கிடைக்க இருக்கிறது. வாகன துறையில் செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டினை கொண்டு வருவது குறித்தும் இந்த நிறுவனம் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து தீர்வுகளையும் வழங்குவதே தங்களின் இலக்கு என கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த கூட்டு நிறுவனமானது 100 ஊழியர்களோடு செயல்பட தொடங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கை ஆயிரங்களாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிஎம்டபிள்யூ டெக் ஒர்க்ஸ் நிறுவனம் சென்னை ,பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் தங்களுடைய அலுவலகத்தை அமைத்து வேலையை தொடங்க இருக்கிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications