இந்தியாவில் ஐபிஓ சீசன் துவங்கியது, திங்கட்கிழமை வெளியான ஐடியாபோர்ஜ் நிறுவனத்தின் ஐபிஓ முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்த நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் 567 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட வெளியிட்ட பங்குகளுக்கு சுமார் 13.24 மடங்கு அதிக முதலீட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளது.
இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் பல மாதங்களாக தூங்கிக்கொண்டு இருந்த ஐபிஓ முதலீட்டு சந்தை மீண்டு வந்துள்ளது உறுதியாக தெரியும் இந்த நேரத்தில்.. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யிடம் மார்ச் மாதம் டாடா குழுமத்தின் முக்கியமான நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ வெளியிட முடிவு செய்து விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து செபி பல வாரங்களாக செய்யப்பட்ட 360 டிகிரி சோதனையில் டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் டாடா குழுமம் சுமார் 19 வருடத்திற்கு பின் ஒரு நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட உள்ளது. டாடா குழுமம் மீது எப்போதும் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் காரணத்தால் இந்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாடா குழுமத்தின் டாடா டெக்னாலஜிஸ் இந்த ஐபிஓ-வில் சுமார் 9.57 கோடி பங்குகள், அதாவது இந்நிறுவனத்தின் 23.60 சதவீத பங்குகள் வர்த்தக சந்தைக்கு வருகிறது, மொத்த பங்குகளும் offer for Sale பிரிவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த முக்கியமான ஐபிஓ-வாக இருக்கிறது. காரணம் டாடா குழுமம் ஜூலை 2004ல் டிசிஎஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்ட பின்பு இதுவரையில் ஒரு நிறுவனம் கூட புதிதாக பங்குச்சந்தைக்கு வரவில்லை. தற்போது டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ வெளியிட உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.
டாடா மோட்டார்ஸ்-ன் கிளை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் ஆட்டோமொபைல் மற்றும் ஏரோஸ்பேஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இன்ஜினியரிங், டிசைன், ஐடி என பல தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை அளித்து வருகிறது.
Tata Technologies வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய பசிபிக் சந்தையில் அதிகப்படியான வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது. 1989 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட டாடா டெக்னாலஜிஸ், 2005ல் ஐரோப்பிய நாட்டின் INCAT நிறுவனத்தைக் கைப்பற்றித் தற்போது அமெரிக்காவில் டெட்ராய்ட் மற்றும் மிச்சிகன், பிரிட்டன் நாட்டில் வார்விக், என உலகில் சுமார் 25 நாடுகளில் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் சுமார் 11000 ஊழியர்களைக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications