உலகளாவிய பிராடெக்ட் இன்ஜினியரிங் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ், கோயம்புத்தூரில் தனது முதல் இன்னோவேஷன் சென்டரை திறந்துள்ளது. இந்த அலுவலகம் கோவையின் பிரபலமான சரவணம்பட்டியில் வியா வொர்க்ஸ்பேஸ்-ல் இன்று திறக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக இருக்கும்
டாடா குழுமத்தின், டிசிஎஸ் ஐபிஓ வெளியிட்டு சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய பங்குச்சந்தையைத் தனது ஐபிஓ மூலம் தெறிக்கவிட்ட டாடா டெக்னாலஜிஸ் தான் தற்போது கோயம்புத்தூரில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ கடந்த மாதம் முடிந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. சந்தையின் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகப்படியான முதலீடு அனைத்து பிரிவுகளிலும் இருந்து வந்த காரணத்தால் சுமார் 140 சதவீதம் உயர்வில் லிஸ்டிங் செய்யப்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் 0.23 சதவீதம் சரிந்து 1243.05 ரூபாயாக உள்ளது.

டாடா டெக்னாலஜிஸ்-ன் இந்தக் கோயம்புத்தூர் இன்னோவேஷன் சென்டர் மூலம் வாகன மென்பொருள் தீர்வுகளின் மேம்பாடு, சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மட்டும் அல்லாமல் உலகளாவிய தனது வாடிக்கையாளர்களுக்கு வாகன மென்பொருளில் புதிய தீர்வுகளைக் கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

கோயம்புத்தூரில் உள்ள இன்னோவேஷன் சென்டர் மூலம் இப்பகுதியில் இருக்கும் திறமையான ஊழியர்களுக்கு உலகளாவிய திட்டங்களில் பணிபுரிவதற்கும், புதிய வாகன மென்பொருள் துறைகளில் திறன் மேம்படுவதற்கும், வாகன மதிப்புச் சங்கிலி முழுவதும் தீர்வுகளை உருவாக்குவதற்கும் வாய்ப்புகளை வழங்க உள்ளதாகத் தனது நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் டாடா டெக்னாலஜிஸ் கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஊழியர்கள், பட்டதாரிகளை நம்பி மட்டுமே இந்த இன்னோவேஷன் சென்டர் துவங்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications