இந்தியாவில் வர்த்தக விரிவாக்கத்திற்காகச் சிறிய நிறுவனங்களையோ அல்லது சக போட்டி நிறுவனங்களையோ கைப்பற்றுவதும் வர்த்தகத்துடன் இணைப்பது வழக்கம். இது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்குப் பின் மிகவும் அதிகமாக நடக்கும் காரணத்தால் மத்திய அரசு நிறுவன இணைப்பு & கைப்பற்றல்-க்கு வரிச் சலுகை அளித்து வந்தது.
ஆனால் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் நிறுவன இணைப்பு & கைப்பற்றல்-கான வரிச் சலுகையை முழுமையாக நீக்கியுள்ளது, இதனால் இனி வரும் காலத்தில் ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றினாலோ அல்லது வர்த்தகத்துடன் இணைத்தாலோ கூடுதல் செலவு ஆகும்.

இதுவரை பல நிறுவனங்கள் தனது புத்தக மதிப்பைத் தாண்டி அதிக மதிப்புக்கு விற்பனை செய்துள்ள நிலையில், இனி வரும் காலத்தில் மதிப்புக் குறைப்பு செய்து நிறுவனங்களைக் கைப்பற்றும் வழக்கம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உதாரணமாக A நிறுவனம் B என்ற நிறுவனத்தை 100 ரூபாய்க்குக் கைப்பற்றுவதாக வைத்துக்கொள்ளுங்கள், B நிறுவனத்தின் நிதியியல் தகவல் படி 50 ரூபாய் மட்டுமே இருக்கும் நிலையில் மீதமுள்ள 50 ரூபாயை நல்லெண்ணம் கணக்கில் A நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது. இதற்காக வரி சலுகையை A நிறுவனம் பெறுகிறது.
இதனால் பல நிறுவனங்கள் அரசுக்கு மிகவும் குறைவான வரியையே செலுத்துகிறது. தற்போது வரிச் சலுகைகள் நீக்கப்பட்டு உள்ள நிலையில் ஸ்டார்ட்அப் சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications