இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது புதிதாக வேலைக்கு எடுத்த ஊழியர்களை அதாவது lateral hire பிரிவில் ஊழியர்களை பணிக்குச் சேர்ப்பதில் குறைந்தது 3 முதல் 4 மாதம் தாமதமாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் lateral hire பிரிவில் 1.8 வருடம் முதல் 15 வருடம் அனுபவம் கொண்ட ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகிறது. ஆரம்பத்தில் ஒரு மாதம் மட்டுமே தாமதமான ஆன்போர்டிங் (OnBoarding) பிராசஸ் தற்போது 3 முதல் 4 மாதம் தாமதமாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்கள் ஏற்கனவே சிறிய டீல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெரும் வர்த்தக பிரச்சனையாக இருக்கும் வேளையில் , டிரான்ஸ்அமெரிக்கா உடனான வர்த்தகம் முறிந்தது, பணிநியமனத்தில் மோசடி செய்த காரணத்திற்காக 6 பேர் பணிநீக்கம் 6 நிறுவனங்கள் தடை ஆகியவற்றின் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் கடந்த சில வாரத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
இவை அனைத்தும் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக கிருதிவாசன் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பு ஏற்றபின்பு நடந்த காரணத்தால் கூடுதல் அச்சத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியது. ஆனாலும் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் பங்குகள் போல் அல்லாமல் டிசிஎஸ் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 0.90 சதவீதமும், 2023 ஆம் ஆண்டில் 0.53 சதவீதமும் உயர்வுடன் உள்ளது. ஆனால் இன்போசிஸ் பங்குகள் 2023ல் 11.83 சதவீதம் சரிந்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி புதிய திட்டங்கள் கிடைப்பதில் இருக்கும் சவால், பல திட்டங்கள் ரத்து மற்றும் தற்காலிக நிறுத்தம், டெக் பட்ஜெட்-ல் குறைப்பு ஆகியவை டிசிஸ் நிறுவனம் lateral hire பிரிவில் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களை பணியில் சேர்க்காமல் இருக்க முக்கிய காரணமாக உள்ளது.
lateral hire பிரிவில் தாமதம் விப்ரோ நிறுவனத்தில் இதற்கு முன்பு மிகவும் மோசமாக இருந்தது, தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் உருவாகியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் Onboarding செய்வதில் ஏற்பட்டு உள்ள தாமதம் மூலம் பெங்களூர், புனே, கொச்சி, புவனேஸ்வர், டெல்லி என்சிஆர், இந்தூர் ஆகிய நகரங்களில் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் டிசிஎஸ் நிறுவனத்தின் lateral hire பிரிவில் Onboarding பணிகள் 1 மாதம் தாமதம் ஆனது, தற்போது 3 முதல் 4 மாதங்கள் ஆகிறது. இதற்குப் பல திட்டங்கள் ரத்து மற்றும் தற்காலிக நிறுத்தம், டெக் பட்ஜெட்-ல் குறைப்பு ஆகியவை முக்கிய காரணமாக உள்ளது.
இதனால் மற்ற நிறுவனத்தில் இருந்து டிசிஎஸ் நிறுவனத்திற்கு வரும் ஊழியர்கள் எப்போது பணியில் சேரப்போகிறோம் என்ற பீதியில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்த ஊழியர்கள் தாங்கள் பணி செய்யும் நிறுவனத்தில் தங்களுடைய பணியை ராஜினாமா செய்து டிசிஎஸ்-ல் சேர உள்ளனர். இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் 3 - 4 மாதம் தாமதமாகும் நிலையில் ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications