2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் இரு பெரும் ஐடி நிறுவனங்களின் நிதி அறிக்கை விவரங்கள் இந்த வாரத்தில் வெளியாக இருக்கின்றன. டாடா கன்சல்டன்சி சர்வீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் நாளை மற்றும் நாளை மறுநாள் என்ற அளவில் 2025 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான முடிவுகளை வெளியிட உள்ளன.
டிசிஎஸ் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஊழியர்களுக்கான ஊதியங்களை மாற்றி அமைத்தது. எனவே இது அந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என தெரிகிறது. இன்போசிஸ் நிறுவனம் எந்தவித ஊதிய உயர்வையும் கொடுக்கவில்லை .

இதனிடையே மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டுக்கான லாபம் 12,140 கோடி ரூபாயாக இருக்கும் என கணிப்பு வெளியிட்டுள்ளது. இது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.9% குறைவு என்றும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது 9.2 % அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அதே வேளையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டுக்கான லாபம் என்பது 6,310 கோடியாக இருக்கும் என்றும் இது முந்தைய காலாண்டை விட 3.8 % என்றும் ஓராண்டு இடைவெளியில் 6.2% அதிகம் என்றும் தெரிவிக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் Ebit மார்ஜின் ஓராண்டு இடைவெளியில் பார்க்கும்போது 130 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 24.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு மார்ஜின் என்பது கடந்த ஓராண்டு காலத்தில் 40 அடிப்படை புள்ளிகள் குறைந்து 20.4% சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நுவாமா தரகு நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்தின் கான்ஸ்டன்ட் கரன்சி (constant currency) சேல்ஸ் விகிதத்தில் முன்னிலையில் இருக்கும் என்றும் டிசிஎஸ் ,டெக் மகேந்திரா ஆகியவற்றை அதிக வளர்ச்சி விகிதம் கொண்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் முதல் காலாண்டில் பெரிதாக எந்த ஒரு ஒப்பந்தத்தையும் நிறுவனம் எடுக்கவில்லை, ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள ஒப்பந்தங்களை முடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்திற்கும் முதல் காலாண்டில் எந்த புதிய ஒப்பந்தமும் கிடைக்கவில்லை.
தற்போதைக்கு இன்போசிஸ் நிறுவனம் பெற்றுள்ள ஆர்டர்களின் மதிப்பு 5 பில்லியன் டாலர்களாகவும் டிசிஎஸ் நிறுவனம் பெற்றுள்ள ஆர்டர்களின் மதிப்பு 10 முதல் 12 பில்லியன் டாலர்களாகவும் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே மோதிலால் தரகு நிறுவனம், இந்தியாவில் உள்நாட்டு ஐடி துறை கடந்த 10 ஆண்டுகளில் மோசமான முதல் காலாண்டை எதிர்கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.
story written by: Devika


Click it and Unblock the Notifications