இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் நேற்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் இக்காலாண்டுக்கு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வேரியபிள் பே தொகை குறித்தும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டு முடிவில் வருடாந்திர அடிப்படையில் 9 சதவீத வளர்ச்சியில் 11,342 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது. இதேபோல் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 8 சதவீத வளர்ச்சியில் 59,692 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது சந்தை கணிப்புகளை உடைந்துள்ளது டிசிஎஸ்.

இதை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டுக்கு சுமார் 70 சதவீத ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபிள் பே தொகையை கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மீதமுள்ள 30 சதவீத ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் வேரியபிள் பே தொகை அளிக்கப்படும் என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள பிரிவு தலைவர் மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 100 சதவீதம் பேருக்கும் வேரியபிள் பே தொகையை கொடுத்தது. இதேபோல் சம்பள உயர்வையும் கொடுத்தது. ஆனால் டிசிஎஸ் உடன் போட்டிப்போடுவதாக கூறப்படும் இன்போசிஸ் கடந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வை அளிக்காமல், இதை வெளிப்படையாக சொல்ல கூட முடியாமல் நிற்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு அதாவது ஊழியர்கள் வெளியேறும் அளவு செப்டம்பர் காலாண்டில் 14.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஜூன் காலாண்டில் 17.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களை வெளியேறாமல் தக்க வைத்துள்ளது.
ஆனால் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6,333 பேர் குறைந்து தற்போது 608,985 ஆக மட்டுமே உள்ளனர். கடந்த ஆண்டின் இதே செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 7,186 பேர் குறைந்து காணப்பட்டனர்.
2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 523 பணியாளர்களை மட்டுமே கூடுதலாக சேர்த்துள்ள நிலையில் 2வது காலாண்டில் 6,333 பணியாளர்கள் குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் 6 லட்சம் என்ற அளவீட்டை இழக்கவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications