இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனம் டிசிஎஸ் இன்று வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் வருடாந்திர அடிப்படையில் 9 சதவீத வளர்ச்சியில் 11,342 கோடி ரூபாய் லாபத்தை பெற்று, சந்தை கணிப்புகளை உடைத்துள்ளது.
இதேபோல் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் அளவுகள் வருடாந்திர அடிப்படையில் 8 சதவீத வளர்ச்சியில் 59,692 கோடி ரூபாய் அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளது டிசிஎஸ். இதுவும் சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது குறிப்பிடித்தக்கது.

இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ் அதன் முதலீட்டாளர்களை மகிழ்விக்கும் வகையில் நடப்பு நிதியாண்டில் 2வது இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இன்றைய காலாண்டு முடிவுகளில் டிசிஎஸ் நிறுவனம் ஒரு பங்கிற்கு 9 ரூபாய் வீதம் ஈவுத்தொகை அளிக்க உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்குகள் 0.52 சதவீதம் சரிந்து 3610.20 ரூபாய் அளவில் முடிந்துள்ளது. டிசிஎஸ் பங்குகள் கடந்த 5 நாட்களில் 1.40 சதவீதமும், ஒரு மாதத்தில் 0.83 சதவீதமும், கடந்த 6 மாதத்தில் 11.35 சதவீதமும், 2023 ஆம் ஆண்டில் 10.72 சதவீதமும் வளர்ச்சி பாதையில் உள்ளது.
டிசிஎஸ் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக ஈவுத்தொகை, பைபேக் திட்டங்களை செப்டம்பர் காலாண்டு முடிவில் அறிவித்துள்ள காரணத்தால் டிசிஎஸ் பங்குகள் அடுத்த சில வர்த்தக நாட்களுக்கு கூடுதலான முதலீட்டை பெற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த ஐடி எகோசிஸ்டம், சர்வதேச பொருளாதார காரணிகள் இதை பாதிக்கவும் செய்யும்.
இதில் முக்கியமாக இஸ்ரேல் - ஹமால் அமைப்புகளுக்கு மத்தியிலான தாக்குதல் , அமெரிக்கா பொருளாதாரத்தின் மீது தொங்கும் கத்தி ஆகியவை ஐடி சேவை துறைக்கு பெரும் தலைவலியாக மாற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இஸ்ரேல் - ஹமால் அமைப்புகளுக்கு மத்தியிலான தாக்குதல் முடிந்து வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பு வரையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து புதிய வர்த்தகத்தை பெறுவது கடினமாக இருக்கும்.
டிசிஎஸ் நிறுவனத்தின் 17000 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்திற்கு அதன் நிர்வாக குழு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசிஎஸ் நிர்வாகம் சந்தையில் இருக்கும் பங்குகளை ஒரு பங்கிற்கு 4150 ரூபாய் என்ற விலைக்கு வாங்க உள்ளதாக காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications