மாதச் சம்பளக்காரர்களுக்கு அப்ரைசல் என்றாலே குஷியாகிவிடு. அப்படி இருக்கையில் இந்தியாவின் முன்னணி IT நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ்-இல் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் சம்பள உயர்விற்கு சந்தோஷப்படுவதற்கு பதிலாக குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏப்ரல், மே மாதங்கள் வந்துவிட்டால் ஐடி ஊழியர்களைக் கையில் பிடிக்க முடியாது. ஏனெனில் இவ்விரு மாதங்களிலும் ஊழியர்களுக்கு அப்ரைசல் வழங்கப்படும். இதையடுத்து டிசிஎஸ் நிறுவனம் மே 18-ஆம் தேதி 5 சதவீதம் வரை சம்பள உயர்வு அறிவித்து ஊழியர்களுக்கு லெட்டர் அனுப்பியிருந்தது.
இப்படி ஒரு அறிவிப்பு வந்தால் ஊழியர்கள் மத்தியில் எவ்வளவு கொண்டாட்டம் இருக்கும்? ஆனால் அதற்கு பதிலாக டிசிஎஸ் ஊழியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். சம்பளம் அதிகரித்திருப்பதாக கடிதம் வந்திருந்தாலும், சில ஊழியர்களுக்கு தங்களுடைய கைக்கு வரும் "டேக் ஹோம் சேலரி" குறைந்ருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய சம்பள தொகுப்பில் சில மாற்றங்களைச் செய்து வருகின்றன, அதேபோல டிசிஎஸ் நிறுவனமும் தங்களுடைய சேலரி ஸ்ட்ரக்சரை மாற்றியமைத்தது. ஒரு சில டிசிஎஸ் ஊழியர்கள் அப்ரைசல் கிடைத்தும், தங்களுடைய மாதச் சம்பளம் ரூ. 3,000 குறைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வருடாந்திர CTC ரூ.1,000 முதல் ரூ. 10,000 வரை குறைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் இந்த மாற்றம்?: கடந்த வருடம் வரை டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் CTC தொகையில் கிராஜுவிட்டி தொகையையும் சேர்த்திருந்தது. ஆனால் தற்போது புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், கிராஜுவிட்டி தொகையை மட்டும் CTC கணக்கிலிருந்து தூக்கி விட்டது. இதனால் ஊழியர்களுக்கு தங்களுடைய மாதாந்திர சம்பளத் தொகையும், வருடாந்திர சிடிசி-யும் குறைவாக தெரிவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊதிய குறைப்பிற்கு டிசிஎஸ் நிறுவனத்தின் சார்பில் தக்க விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், சில ஊழியர்கள் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை. ஏனென்றால் நாளைக்கே டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாறும்போது, அங்கு பழைய நிறுவனத்தில் வழங்கிய பே-ஸ்லிப்பைப் பொருத்துதான் புதிய நிறுவனத்தில் சம்பளம் கிடைக்கும். அப்படியானால் தற்போது ஸ்லிப்பில் குறைக்கப்பட்டிருக்கும் தொகையால், பிற நிறுவனங்களுக்கு செல்லும்போது பிரச்சனை ஏற்படும் என்று கருதுகின்றனர். அதேபோல அடிப்படை சம்பளத்தை தவிர வேரியபிள் பேவும் குறைந்து விட்டதாக ஒரு சில ஊழியர்கள் கூறியுள்ளனர். வேரியபிள் பேவை மாதா மாதம் வழங்காமல் 3 மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை தள்ளி போட்டு தருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பல ஐடி நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி வழங்கின. அதன்பின்னர் மீண்டும் நிறுவனங்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தது. டிசிஎஸ் நிறுவனம் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பெர்பார்மன்ஸ் போனஸ் மற்றும் இதர நன்மைகளை வழங்குவதாக ஊழியர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தவிர டிசிஎஸ் நிறுவனம் இந்த முறையும் சிறப்பான செயல்திறனை காட்டிய ஊழியர்களுக்கு A+ மற்றும் A ரேட்டிங் வழங்கியுள்ளது. இது போன்ற ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு கீழ் B மற்றும் C ரேட்டிங் பெற்ற ஊழியர்களுக்கு கிடைத்த சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் 5.84 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications