டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் சந்தை கணிப்புகளை உடைந்து 3 மாத காலத்திற்கு 17 சதவீத வருடாந்திர உயர்வுடன் மொத்த லாபமாக 11,074 கோடி ரூபாயும், 13 சதவீத வருடாந்திர உயர்வுடன் 59,381 கோடி ரூபாய் வருவாயும் பதிவு செய்துள்ளது.
மேலும் நிலையான நாணய மதிப்பீட்டில் அதாவது Constant Currency-யில் கணக்கிடும் போது டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அளவில் 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதோடு டிசிஎஸ் நிறுவனத்தின் ஆர்டர் புத்தகத்தின் மதிப்பு 10.2 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் புக் டூ பில் குறியீடு 1.4 ஆக உள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த வொர்க் பர்ம் ஹோம் சலுகையை ரத்து செய்த நிலையில் தற்போது 55 சதவீத ஊழியர்கள் அலுவலகத்தில் வந்து பணியாற்றுவதாகவும், வாரத்தில் 3 நாள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என கட்டுப்பாடு பின்பற்று வரப்படுகிறது எனவும் ஜூன் காலாண்டு முடிவில் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் முக்கியமான அட்ரிஷன் அளவுகள் இன்னும் பாதுகாப்பான நிலைக்கு வரவில்லை, ஜூன் காலாண்டு உடன் முடிவடைந்த 12 மாதத்தில் டிசிஎஸ்-ன் அட்ரிஷன் அளவு 17.8 சதவீதமாக உள்ளது. இது கடந்த காலாண்டில் 20.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் டெக் சேவைக்காக செலவிடப்படுவது குறைந்துள்ளது டிசிஎஸ்-ன் துறைவாரியான வளர்ச்சி அளவீட்டில் தெரிகிறது. டிசிஎஸ்-ன் BFSI பிரிவு ஜூன் காலாண்டில் வெறும் 3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
டிசிஎஸ்-க்கு முக்கிய வர்த்தக பிரிவே இந்த BFSI சேவை பிரிவு தான், இதோடு மற்ற துறைகளான டெலிகம்யூனிகேஷன்ஸ், ரீடைல், டெக்னாலஜி சர்வீசஸ் ஆகிய துறைகள் 0.5 சதவீதம் முதல் அதிகப்படியாக 5.3 சதவீதம் வரையில் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. லைப் சையின்ஸ் 10 சதவீதமும், உற்பத்தி துறை 9.4 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

பிராந்திய அடிப்படையில் அமெரிக்காவில் டிசிஎஸ் வர்த்தகம் ஜூன் காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 5 சதவீதமும், ஐரோப்பிய சந்தையில் 3.4 சதவீதமும், பிரிட்டன் நாட்டில் 16 சதவீதமும், வளரும் சந்தைகளான வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சியை ஜூன் காலாண்டில் பதிவு செய்து உள்ளது.


Click it and Unblock the Notifications