சென்னை: இந்திய ஐடி சேவைத் துறையில் அடுத்தடுத்து உயர் அதிகாரிகள் வெளியேறுவது தற்போது தொடர்கதையாகி வருகிறது. டாப் 10 ஐடி சேவை நிறுவனத்தில் வாரத்தில் ஒரு நிறுவனத்திலாவது உயரதிகாரிகள் மாறும் நிகழ்வு நடந்து வருகிறது. இதுநாள் வரையில் இன்போசிஸ், விப்ரோ-வில் அதிகமாக இருந்த இப்பிரச்சனை தற்போது ஹெச்சிஎல், டிசிஎஸ்-க்கு வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) $15 பில்லியன் மதிப்புள்ள வட அமெரிக்க வணிகத்தை நிர்வாகம் செய்து வந்த சுரேஷ் முத்துசாமி திடீரென பதவி விலகியுள்ளார்.

இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் கே கிருதிவாசன் டிசிஎஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதிலிருந்து நடக்கும் மிக முக்கியமான நிர்வாக அதிகாரி வெளியேற்றமாகும். இதற்கு முன்பு சிஓஓ பதவியில் இருந்த என்.கணபதி சுப்பிரமணியன் ஓய்வு பெற்றது மூலம் வெளியேறினார்.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் TCS-ன் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வருவாய் பங்கீட்டையும் கொண்டு இருக்கும் வட அமெரிக்க வர்த்தக தலைவராக நியமிக்கப்பட்ட முத்துசாமி, ஆகஸ்ட் தொடக்கத்திலேயே நிறுவனத்தை விட்டு வெளியேறினார் என்று டிசிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் TCS-ன் வட அமெரிக்க பிராந்திய வர்த்தகத்திற்கு யார் அடுத்த தலைவர் என்ற முக்கிய கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது. டிசிஎஸ் இப்பதவியில் புதிய தலைவரை நியமிக்காது, இதற்கு பதிலாக, வட அமெரிக்கப் பிராந்தியத்தின் பிரெசிடென்ட்டான அமித் பஜாஜ் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்று டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
2020 ஆகஸ்டு முதல் பிரெசிடென்ட் ஆக தனது பதவியை வகித்து வரும் அமித் பஜாஜ், இப்போது பிராந்தியத்தின் செயல்பாடுகளை நிர்வகிப்பார்.
முத்துசுவாமி சுமார் 26 ஆண்டுகள் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், தற்போது அவருடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வெளியேற உள்ளார். மேலும் இவரின் வெளியேற்றத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
முத்துசுவாமி தலைமையின் கீழ், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய TCS-ன் வட அமெரிக்க வணிகம், மார்ச் 2024 முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த 29.1 பில்லியன் டாலர் வருவாயில் 51.1% வருவாய் பங்கீட்டை கொண்டு உள்ளது.
சமீபத்தில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக இருந்த பிரதீக் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதீக் அகர்வால் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஎப்ஓ-வாக 2018 ஆம் ஆண்டு முதல் இப்பதவியிலிருந்து வரும் நிலையில் தற்போது நிறுவனத்திற்கு வெளியே புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications