இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த "மந்தநிலை அச்சத்திற்கு" பிறகு 2024-25 நிதியாண்டில் மீண்டும் சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்க்கிறோம் என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் என்.சந்திரசேகரன் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், "உலகளாவிய பொருளாதார சூழல் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்த நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI), புதிய எனர்ஜி, விநியோக சங்கிலி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை தொழிற்துறையின் முன்னேற்றத்தை வடிவமைக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவிய ரெசிஷன் அச்சம், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நிதிக் கட்டுப்பாடு ஆகியவற்றால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஆனால், தற்போது வளர்ச்சி அளவீடுகள் மேம்பட்டு வருகிறது, பணவீக்கம் குறைந்துள்ளது மற்றும் நிதி தளர்வு ஆகியவை எதிர்காலத்தில் நம்பிக்கை அளிக்கின்றன" என்று டிசிஎஸ் முதலீட்டாளர்களுக்கு என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் புதிய பரிமாணமாகக் கருதப்படும் "ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI - GenAI)" தொழில்நுட்பம், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் சந்திரசேகரன் டிசிஎஸ் செய்த முதலீடுகளையும், எதிர்கால வளர்ச்சிப் பாதை குறித்துப் பேசுகையில், டிசிஎஸ் நிர்வாகம் ஏற்கனவே கிளவுட், டேட்டா இன்பராஸ்டக்சர் மற்றும் லார்ஜ் பிராசசிங் பவர் ஆகியவற்றில் நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடு செய்துள்ளன. இவை செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ (AI/GenAI) தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்குப் பெரிய அளவில் உதவும்.
ஜெனரேட்டிவ் ஏஐ (GenAI) தொழில்நுட்பம், உற்பத்தித்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாம் இதுவரை கண்டிராத அல்லது கற்பனை செய்திராத மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்று AI மீதான தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உலகளவில் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனித்து சேவை அளிக்க டிசிஎஸ் தயாராகி வருகிறது என தெரிவித்தார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன். மேலும் 2024 ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிர்வாகம் தனது நிறுவனத்தின் 50 சதவீத ஊழியர்கள் அதாவது 3 லட்சம் ஊழியர்களுக்கு ஏஐ துறையில் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications