ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. டெக் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் ஒருபுறம் சவாலை ஏற்படுத்தினாலும் மற்றொருபுறம் இந்த நிறுவனங்களின் வேலைகளை எளிமையாக்கியுள்ளது.
ஏஐ வளர்ச்சிக்கு மத்தியில் அதனை தங்கள் அன்றாட பணிகளில் ஒருங்கிணைத்து திறம்பட செயல்பட்டு யார் இந்த ஏஐ பந்தயத்தில் முதலிடம் பிடிப்பது என்ற போட்டி இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் வேலையில் கட்டாயம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

டிசிஸ் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசனே இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். ஏஐ வருகையால் ஐடி நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் இருக்கின்றன, கூடிய விரைவில் இந்தியா ஐடி நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் அனைத்தும் ரத்தாகிவிடும், ஐடி நிறுவனங்கள் சரிவடைய போகின்றன என அண்மையில் சிட்ரினி ஆய்வறிக்கை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. பங்குச்சந்தையில் கூட ஐடி பங்குகள் பெரும் வீழ்ச்சி அடைந்தன. ஆனால் அடுத்த நாளே அது சரியாகிவிட்டது.

இந்நிலையில் தான் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் கட்டாயம் ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. மும்பையில் நடைபெற்ற இந்திய ஐடி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிசிஎஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி கீர்த்தி வாசன் எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்வது ஒன்றுதான், ஏஐ மூலம் நீங்கள் ஒரு வேலையை சிறப்பாகவும் வேகமாகவும் மலிவாகவும் செய்ய முடியும் என்பதை கண்டறிந்தால் அது நம்முடைய வருவாயை பாதித்தாலும் கூட பரவாயில்லை நம் வாடிக்கையாளரிடம் வெளிப்படையாக தெரிவியுங்கள் என கூறியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த தொழில்நுட்பம் நம்முடைய வாழ்வாதாரத்தை பறித்து விடும் என நாங்கள் பயப்படவில்லை என தெரிவித்திருக்கும் கீர்த்தி வாசன், இது மேலும் பல வாய்ப்புகளை நமக்கு வழங்கப்போகிறது என நம்புகிறோம் என்கிறார். இந்த மாற்றத்தை எதிர்க்கக் கூடாது, மாற்றத்தை ஏற்க தயாராகுங்கள் அதன் மூலம் நமக்கு நிறைய நன்மை கிடைக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
கீர்த்திவாசனின் இந்த கூற்று இந்திய ஐடி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த போகின்றன என்பதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. முன்னதாக விப்ரோ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ஹரிஷ் செட்டியும் ஏஐ தொழில்நுட்பம் சாஃப்ட்வேர் சேவைகளுக்கான தேவையை அதிகப்படுத்த தான் போகிறது, இது மேலும் வேலைவாய்ப்புகளை தான் உருவாக்கப் போகிறது என ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications