சமீப காலமாக தங்கள் வேலைக்காக அதிக நேரம் அர்பணிக்க வேண்டும் என்று முன்னணி தொழில் அதிபர்கள் கூறிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. L&T தலைவரான எஸ்.என்.சுப்பிரமணியன் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளையும் வேலைக்காக தியாகம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதற்கு முன்னர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருந்தார்.
இவர்களுடைய கருத்து பணி புரியும் ஊழியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு வேலை வாழ்க்கை சமநிலை குறித்த கேள்விகளையும் எழுப்பியது. இவர்களுடைய கருத்துக்கு மத்தியில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO கே. கிருதிவாசன் கூறுகையில், வேலை நேரத்தை விட தனிநபர் வேலை வாழ்க்கை சமநிலையை கண்டறிவது தான் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

அதோடு தான் சில வாரங்கள் 60 மணி நேரம் வேலை செய்வதாகவும், சில வாரங்கள் 40 மணி நேரம் வேலை செய்வதாகவும்.. என்னைபோலவே காலப்போக்கில் நீங்களும் உங்கள் சொந்த சமநிலையை கண்டுபிடித்து மகிழ்ச்சி அடைந்து விடுவீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
L&T தலைவர் சுப்பிரமணியன் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் ஞாயிற்றுக்கிழமைகளையும் அதற்காக ஒதுக்க வேண்டும் என்று கூறிய கருத்துக்கு பதில் அளித்த கிருதிவாசன், "அவர் இந்த கருத்தை கூறும் போது நானும் அங்கு இல்லை.. நீங்களும் அங்கே இல்லை.. எனவே சுப்ரமணியன் தனது கருத்தை எந்த சூழலில் மற்றும் எந்த நோக்கத்தோடு கூறினார் என்பதை நீங்களோ அல்லது நானோ முழுமையாக தெரிந்திருக்க முடியாது. எனவே அவர் சொன்னதை தெரிந்து கொள்ளாமல் எடுத்துக் கொள்வது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமைகளில் ஏதேனும் வேலை அவசரமாக முடிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் இருந்தால் அதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். அதே நேரம் சில வாரங்களில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமை போன்ற நாட்களில் வேலை குறைவாக இருக்கும். அதற்கு முந்தைய வாரத்தில் அதிகமாக வேலை செய்திருந்தால் அந்த நாட்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். சில நாட்களில் ஓய்வெடுப்பதும் சில நாட்களில் அதிகம் வேலை செய்ய செய்வதும் இயல்பானது தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
தொழில்துறையில் முன்னணி வகிக்கும் இந்த மூவரின் கருத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு சமநிலை என்பது தனிநபருக்கு ஏற்ப மாறுபடும் என்பதை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications