இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கே.கிருதிவாசன் 2025ஆம் நிதியாண்டுக்கான சம்பளம் 4.6% உயர்ந்து 26.52 கோடி ரூபாயாக உள்ளது என நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 2025ஆம் நிதியாண்டுக்கான நிதியியல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் தற்போது சிஇஓ-க்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகளின் சம்பள அளவுகளை வெளியிட துவங்கியுள்ளது. இதன் அடிப்படையில் டிசிஎஸ் சிஇஓ கே.கிருதிவாசன் 2025ஆம் நிதியாண்டுக்கான சம்பளமாக 26.52 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.

இதில் அடிப்படை ஊதியமாக 1.395 கோடி ரூபாய், சலுகைகள், முன்பணம் மற்றும் படிகள் உட்பட 2.12 கோடி ரூபாய், மற்றும் கமிஷனாக 23 கோடி ரூபாய் அடங்கும். இதன் மூலம் 2025ஆம் நிதியாண்டில் மொத்தம் 26.52 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.
2024-ம் நிதியாண்டில் கிருதிவாசன் 25.2 கோடி ரூபாய் ஊதியம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே 2024ஆம் நிதியாண்டு காலகட்டத்தில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலில் பரேக் 66 கோடி ரூபாய் ஊதியம் பெற்றார். விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தியரி டெலபோர்ட் 166 கோடி ரூபாய் பெற்று, ஐடி துறையில் மிக உயர்ந்த ஊதியம் பெறும் நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஐடி ஊழியர்களின் சராசரி ஆண்டு ஊதிய உயர்வு 4.5 முதல் 7% வரை இருந்தது. இதன் அடிப்படையிலேயே கே.கிருதிவாசன் சம்பளமும் உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் டிசிஎஸ் ஊழியர்களிக்கு நிர்வாகம் இரட்டை இலக்க ஊதிய உயர்வு அதாவது 10% மற்றும் அதற்கு மேல்) பெற்றனர். இந்தியாவிற்கு வெளியே உள்ள ஊழியர்களுக்கு 1.5 முதல் 6% வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கடந்த மாதம் 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. மார்ச் காலாண்டில் டிசிஎஸ்-ன் நிகர லாபம் 1.7 சதவீதம் குறைந்து ரூ.12,224 கோடியாக உள்ளது, ஆனால் ஆப்ரேட்டிங் வருவாய் 5.3% அதிகரித்து ரூ.64,479 கோடியை எட்டியுள்ளது.
2024-25 முழு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் மொத்தம் ரூ.2,55,324 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 6% அதிகமாகும். மேலும் இது நிலையான நாணய மதிப்பு அடிப்படையில் கணக்கிடும் போது வருவாய் 4.2% ஆக உயர்ந்துள்ளது.
2024-ம் நிதியாண்டில் டிசிஎஸ்-ன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்ட நிலையில், 2025-ம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் மீண்டும் வளர்ச்சியை கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 607,979 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது, மொத்தமாக 6,433 பேர் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications