ஐடி வேலை கிடைத்துவிட்டாலே வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது என்ற நிலைமை தற்போது மாறி இருக்கிறது. ஐடி ஊழியர்களுக்கு எப்போதுமே பணி நீக்கம் எனப்படும் கத்தி அவர்களின் தலை மேல் தொங்குகிறது. ஐடி நிறுவனங்கள் திடீர் திடீரென தங்களுடைய ஊழியர்களை லே ஆஃப் செய்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 60,000க்கும் மேற்பட்டவர்கள் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு தங்கள் ஊழியர்களில் சுமார் 12,000 பேரை வேலையை விட்டு நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு ஒட்டுமொத்த இந்திய ஐடி துறையையும் அதிர்ச்சி அடைய வைத்தது. டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்வதாக கூறிய எண்ணிக்கையை விட அதிகமான ஊழியர்கள் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி இருக்கின்றனர். அதாவது 20,000க்கும் அதிகமான ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

டிசிஎஸ் நிறுவனம் சாமானிய ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு தலைமை செயல் அதிகாரிக்கு மட்டும் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி வழங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. பல்வேறு நிறுவனங்களிலும் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் சொல்லக்கூடிய விஷயம் இதுதான். கஷ்டப்பட்டு வேலை பார்ப்பவர்களை விட தலைமைச் செயலாளர் அதிகாரி போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பல மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதுதான்.டிசிஎஸ் நிறுவனத்திலும் அது உண்மை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.
கடந்த ஆண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து 23,460 ஊழியர்கள் வெளியேறி இருக்கின்றனர், கடந்த ஆண்டில் நிறுவனத்தின் லாபம் 1.35% உயர்ந்து 49,210 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதே ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கக்கூடிய கீர்த்திவாசனின் சம்பளம் 28.1 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 6.3 சதவீதம் அதிகம். இந்த செய்தி டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.
சாமானிய ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு தலைமை செயல் அதிகாரிக்கு சம்பளத்தை வாரி கொடுத்து இருக்கிறார்கள் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி கீர்த்தி வாசன் 28.1 கோடியை சம்பளமாக பெற்று இருக்கிறார். அதாவது கீர்த்தி வாசனுக்கு 1.67 கோடி சம்பளம், 1.43 கோடி ரூபாய் அலோவென்சுகள் மற்றும் 25 கோடி ரூபாய் கமிஷன் என பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது.
சாதாரணமாக பணிபுரியக்கூடிய ஊழியரின் சராசரி சம்பளத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் கீர்த்தி வாசனின் சம்பளம் 332.8 மடங்கு அதிகமாம். அதே வேளையில் இந்தியாவிலேயே குறைந்த சம்பளம் வாங்கக்கூடிய ஐடி நிறுவன சிஇஓ என்றால் அது கீர்த்தி வாசன் தான். ஏனெனில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சீனிவாஸ் பல்லையா 53.6 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார். இன்போசிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் 80 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார், ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜயகுமார் 84.16 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

