இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஒரு ஊழியருக்கு, 2025 ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வாக மாதம் ரூ.422 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்த ஊழியர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு, தொழில்நுட்ப ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊழியர், தனது 2024-25 ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வு கடிதங்களின் ஸ்கிரீன் ஷாட்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், கடந்த 2021 ஆம் ஆண்டில் டிசிஎஸ்ஸில் சேர்ந்ததாக கூறிய அந்த ஊழியர், "நான் 4 ஆண்டுகள் இங்கே இருந்தது என்னுடைய தவறுதான். ஒரு நச்சுத்தன்மையான சூழலில் சிக்கித் தவிப்பதாக நீங்கள் உணர்ந்தால், இது உங்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் பணியில் சேர்ந்த முதல் 2 ஆண்டுகள் நச்சுத்தன்மை நிறைந்த சப்போர்ட் புராஜெக்டில் கழிந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அங்கு மேலாளர்கள் ஊழியர்களை திட்டுவதாகவும், நுணுக்கமாக கண்காணிப்பதாகவும் கூறியுள்ளார். அந்த உயர் அதிகாரிகளுக்கு உரிய கர்மா கிடைக்கும் என்றும் அவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
அந்தப் புராஜெக்ட்டில் இருந்து வெளியேறுவதற்குப் பல மேலாண்மை நிலைகளில் போராட வேண்டியிருந்ததாகவும், வெளியேறும் முன் பல அவமானங்களை சந்தித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அடுத்த 2 ஆண்டுகள் டெவலப்மென்ட் பிரிவில் கற்றலுக்கு உதவியாக இருந்தாலும், ஊதியம் தான் தனக்கு மிகப்பெரிய கவலையாக இருந்ததாக அந்த ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு எனக்குக் கிடைத்த சம்பள உயர்வு ரூ.422 மட்டுமே. அதுவும் ஆறு மாதங்கள் தாமதமாக கிடைத்தது. நாங்கள் அடிப்படை வேலைகளை செய்கிறோம், அழுத்தத்தைச் சுமக்கிறோம். ஆனால் அதற்கான வெகுமதிக்கு சற்றும் பொருந்தவில்லை" என்று இந்த ₹422 உயர்வு தனக்கு ஒரு பலத்த அடி என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சக ஊழியர்களுக்கு அறிவுரை கூறிய அவர், "உங்கள் மதிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள், தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள், தேவைப்பட்டால் வெளியேற திட்டமிடுங்கள்" என்று கூறியுள்ளார். அத்துடன், புதிய பணியில் சேருபவர்கள் வாய்ப்புகளை நன்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த ரெடிட் பயனர்கள் பலரும் தங்கள் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். ஒரு பயனர், "எனக்கு இரண்டு முறை 12% க்கு குறைவாக சம்பள உயர்வு கிடைத்தால், நான் நிறுவனத்தை மாற்றுவேன். ஒருமுறை 8% க்கு குறைவாக கிடைத்தால், மூன்று மாதங்களில் வெளியேறி விடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், "உங்கள் தொழில் வாழ்க்கையை வடிவமைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. நான் 4 ஆண்டுகளில் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.21 லட்சம் வருமானத்துக்கு வளர்ந்தேன், இது சாத்தியம்தான்" என்று ஊக்கமளித்துள்ளார்.
இதற்கிடையே டிசிஎஸ் நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் தந்துள்ளது. ”இந்த நபர் கூறும் தகவலில் உண்மையான தகவல்கள் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளது. டிசிஎஸ் சம்பள உயர்வு தந்து செப்டம்பர் 1ஆம் தேதி முதலே அதனை நடைமுறைப்படுத்திவிட்டது என்றும், 80% ஊழியர்கள் சம்பள உயர்வு பெற்றார்கள் என்றும் தெரிவித்துள்ளது. சராசரியாக 4.5% முதல் 7% வரை ஊழியர்கள் சம்பள உயர்வு பெற்றார்கள், சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது” என கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications