இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் பங்குகளை, அதன் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் பிளாக் டீல் வாயிலாக விற்பனை செய்வதாக அறிவிப்பு வந்தது மூலம் இப்பங்குகள் சரிவு பாதையில் உள்ளது. ஆனால் இந்தச் சரிவு டிசிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகம், வருமானம், ஊழியர்களின் சம்பள உயர்வுகளை எந்த வகையிலும் பாதிக்காது.
2024 ஆம் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிய உள்ள வேளையில், இந்தியாவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அளிக்கும் நடைமுறைகளைத் துவங்கியுள்ளது. இதன் வாயிலாக டிசிஎஸ் இந்த ஆண்டுத் தனது ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு அளிக்கும் என்பது குறித்த கணிப்புகள் வெளியாகியுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனம் சம்பள உயர்வு வழங்குவதற்கான நடைமுறைகளைத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பள உயர்வில், இந்திய அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களுக்கும் (Offsite employees) வெளிநாட்டுக் கிளைகளில் பணிபுரிபவர்களுக்கும் (Onsite employees) இடையே வேறுபாடு இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து டிசிஎஸ் நிர்வாகம் 2024-25 நிதியாண்டில் அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களுக்கு 7-8% சம்பள உயர்வும், வெளிநாட்டுக் கிளைகளில் பணிபுரிபவர்களுக்கு 2-4% சம்பள உயர்வும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பள உயர்வு ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தத் தகவலை டிசிஎஸ் நிறுவனம் "வதந்தி" என்று குறிப்பிட்டாலும், சம்பள உயர்வு செயல்முறை பணிகள் முடிக்கப்படும் அளவில் இருப்பதாகவும், சிறப்பாகச் செயல்படும் பணியாளர்களுக்கு 12-15% வரை சம்பள உயர்வு வழங்கப்படலாம் என்றும் பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் அறிக்கை கூறுகிறது.
டிசம்பர் 31, 2023 முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 6,03,305 ஆக உள்ளது, கடந்த நிதியாண்டில் (FY24) டிசிஎஸ் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்ட பணியாளர்களுக்கு 12-15% வரையிலும், பிற ஊழியர்களுக்குச் சராசரியாக 6-9% வரையிலும் சம்பள உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நாஸ்காம் (NASSCOM) கூட்டத்தில், பேசிய டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி கே. கிருதிவாசன், நிறுவனம் பணியாளர் குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பரவி வந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார், மேலும் 2024ஆம் ஆண்டில் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதே தங்களின் இலக்கு என்றும் பணியாளர் தேர்வு நிறுத்தப்பட மாட்டாது என்றும் உறுதிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications