இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ன் பல நூறு ஊழியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதியிட்டு வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
வருமானவரித்துறை சட்டத்தின் பிரிவு 143(1)இன் கீழ் 2024 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் TDS செலுத்தப்பட்டதற்கான பதிவுகள் இல்லை எனக் கூறி இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வட்டியுடன் சேர்த்து, 50,000 ரூபாய் முதல் 1,45,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டும் என வருமானவரி துறையின் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே வருமான வரித்துறை தளத்தில் TDS கிளைம் தானாக அப்டேட் ஆகவில்லை என்றும் இதுவே பிரச்சினைக்கு காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
ஊழியர்கள் இது தொடர்பாக அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ள டிசிஎஸ் நிறுவனம் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த பிரச்சனையை சரி செய்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை முறையாக செலுத்துவார்கள் என தெரிவித்துள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட ஒரு சிறு தவறாக இருக்கலாம் என நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஊழியர்கள் அவர்களாகவே நான்காம் காலாண்டுக்கான டிடிஎஸ் தொகையை உள்ளீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாலேயே இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக ஊழியர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
அதாவது ஊழியர்களின் வருமானம் தொடர்பாக டிசிஎஸ் நிறுவனம் வழங்கிய படிவம் 16 மற்றும் வருமான வரித்துறை வழங்கும் படிவம் 26 ஏஎஸ் ஆகிய இரண்டிலும் கணக்கீடுகள் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சிறு தவறால் இந்த கணக்கீடுகள் பொருந்தவில்லை என்பதே பிரச்சினையின் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் இதனை சரி செய்ய முயன்று வருகிறது. எனவே ஊழியர்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் வருமான வரி துறைக்கு எந்தபணமும் செலுத்த வேண்டாம் என நிறுவனம் கூறியுள்ளது.
டிடிஎஸ் பதிவுகள் தொடர்பாக தற்போது எழுந்துள்ள இந்த சிக்கல் காரணமாக பல்வேறு ஊழியர்களுக்கும் அவர்களது வருமான வரி தொகை திரும்ப கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications