இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளாக MENA மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அதிகப்படியாகக் கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இந்த வகையில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட 7வது பெரிய நாடான பிரேசிலின் பரானா மாநிலத்தில் உள்ள லண்ட்ரினாவில் (Londrina) புதிய டெலிவரி சென்டரை அமைக்கவுள்ளதாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ கே.கிருத்திவாசன் தலைமையில் வேகமாக, பல பிரிவுகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்தில் COO பணியிடத்தை நீக்குவதாக அறிவித்து பெரும் அதிர்ச்சி கொடுத்த அதேவேளையில் 50 சதவீத ஊழியர்களுக்கு AI துறையில் பயிற்சி கொடுத்த அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த புதிய டெலிவரி சென்டர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1600க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளது, மேலும் இந்த டெலிவரி சென்டர் பிரேசில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், டிஜிட்டல்மயமாக்கலுக்கும் முக்கிய பங்களிப்பு செய்யும் என நம்பப்படுகிறது.
லண்ட்ரினாவில் டிசிஎஸ் 2018 ஆம் ஆண்டில் தனது முதல் அலுவலகத்தைத் திறந்தது. தற்போது, அந்த நகரில் சுமார் 1700 பேர் பணியாற்றுகின்றனர். புதிய டெலிவரி சென்டர், லண்ட்ரினாவில் உள்ள டிசிஎஸ் பணியாளர்களை ஒரே இடத்தில் கொண்டுவந்து, ஒத்துழைப்புடன் பணியாற்றவும் மற்றும் இன்னோவேஷன் தூண்டும் ஒரு மையமாகச் செயல்படும்.
இந்த டெலிவரி சென்டர், பிஸ்னஸ் டிரான்ஸ்பார்மேஷன், செயற்கை நுண்ணறிவு மற்றும் Cognitive Business Operations போன்ற முக்கிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கும், மேலும் பிரேசில் மற்றும் உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விரிவான தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும்.
டிசிஎஸ் பிரேசிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. லண்ட்ரினா, சாவோ பவுலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களில் இதன் கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் டிசிஎஸ் அந்நாட்டில் வங்கி, காப்பீடு, சுரங்கம், ரீடைல் வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த 140 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்கி வருகிறது.
டிசிஎஸ் தொடர்ந்து 10 ஆண்டுகளாகப் பிரேசிலில் சிறந்த வேலைவாய்ப்பு வழங்குபவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் 2022 ஆம் ஆண்டில் சாவோ பவுலோ மாநிலத்திடமிருந்து diversity seal என்ற அங்கிகாரத்தையும் பெற்றுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் இந்த விரிவாக்கம் பிரேசிலின் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலை மாறும் என்பது தான் முக்கியமான விஷயம்.


Click it and Unblock the Notifications