இந்திய ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், அடுத்த நிதியாண்டில் இரு இலக்க வளர்ச்சியினை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் காலாண்டில் அதன் நிகரலாபம் 7.18% அதிகரித்து, 8,701 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 8,118 கோடி ரூபாயாக நிகரலாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே டாலரில் வருவாய் வளர்ச்சியை 5.1 சதவீதமாகவும், இதே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
நல்ல வளர்ச்சி
டிசிஎஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் கோபிநாதன், கடந்த டிசம்பர் காலாண்டில் நல்ல லாபம் கண்டுள்ளது. இந்த காலாண்டில் பல புதிய ஒப்பந்தங்கள், பரந்த அடிப்படையிலான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக வங்கி மற்றும் நிதி சேவைகளில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன என்று கூறியுள்ளார்.
எவ்வளவு வருவாய்?
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 42,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.42 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 4.68 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் இதே காலாண்டில் டிசிஎஸ்ஸின் வருவாய் 39,854 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 40,135 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்ட் அறிவிப்பு?
இதற்கிடையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, டிசிஎஸ் நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்கிற்கு 6 ரூபாய் அறிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஒன்பது ஆண்டுகள் மிக வலுவான காலாண்டு வருவாயினை இந்த டிசம்பர் காலாண்டில் கண்டுள்ளது. இது பல புதிய ஒப்பந்தங்கள் மற்றும் நிலையான நாணய வருவாய் என பல காரணங்களினால் கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனாவும் ஒரு காரணம்
இந்த லாபத்திற்கு ஒரு வகையில் கொரோனாவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கொரோனாவின் காரணமாக சர்வதேச அளவில் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது ஐடி துறை மட்டும் அல்ல, இன்றளவிலும் பல துறைகளிலும் டிஜிட்டல் தேவையை ஊக்குவித்துள்ளது. இதன் காரணமாக டிஜிட்டல் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தன. இதுவும் வலுவான வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இரு இலக்க வளர்ச்சி காண்போம்
எப்படி இருப்பினும் 2021ம் நிதியாண்டு எதிர்ப்பார்பினை போலவே நல்ல வளர்ச்சியினைக் காணலாம். அடுத்த 2022ம் நிதியாண்டிலும் டிசிஎஸ் நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சியினை காணலாம் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என கோபிநாதன் கூறியுள்ளார். ஆக அடுத்த ஆண்டிலும் நிச்சயம் நாங்கள் இரு இலக்க வளர்ச்சியினை காண்போம் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications