இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டாடா குழுமத்திற்கு உட்பட்ட டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என தொடர்ச்சியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த சூழலில் அலுவலகத்திற்கு வராமல் தவிர்க்க கூடிய ஊழியர்களின் அப்ரைசல்களை (Appraisal ) நிறுத்தி வைத்திருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறது என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஏதுவாக வொர்க் ஃபிரம் ஹோம் என்ற நடைமுறையை அமல்படுத்தின.

ஊழியர்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் இருந்தபடியே ஒரு லேப்டாப் மற்றும் இணைய தொடர்பு கொண்டு தங்களுடைய வேலைகளை செய்து வந்தார்கள். அதன் பிறகு பெருந்தொற்று முடிவடைந்து உலகமே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இந்த நிலையில் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்கள் பழையபடி அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து வருகின்றன.
ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் தங்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது தான் சௌகரியமாக இருப்பதாக கூறி முழு நேரமாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரிவதை தவிர்த்து வருகின்றனர். இந்த சூழலில் தான் டிசிஎஸ் நிறுவனம் அலுவலகம் வராமல் தவிர்க்கக்கூடிய ஊழியர்களுக்கு அப்ரைசல்களை நிறுத்தி வைத்திருக்கிறது. வழக்கமாக அப்ரைசலில் தான் ஊழியர்களின் செயல்திறன் என்பது மதிப்பிடப்படும். இதன் அடிப்படையில் தான் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும்.
இது தவிர நிறுவனத்தின் அட்டெண்டன்ஸ் தேவையையும் மாற்றி அமைத்திருக்கிறதாம். அதாவது ஊழியர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரமாவது அலுவலகத்தில் இருக்க வேண்டும், 4 மணி நேரத்துக்கும் குறைவாக அவர்கள் அலுவலகத்தில் இல்லாமல் போனால் அவர்களுக்கு உடனடியாக எச்சரிக்கை மெசேஜ்களை அனுப்புகிறதாம்.
இந்த நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பி உள்ள ஒரு மின்னஞ்சலில் அப்ரைசல் பணிகள் முடிந்துவிட்டது , அலுவலகத்தில் இருந்து வேலை என்ற உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு அப்ரைசல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என கூறி இருக்கிறதாம். இதனால் டிசிஎஸ் ஊழியர்கள் பலரும் அதிரச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ஊழியர்களுக்கு Variable Payவேறு கிடைக்க வேண்டுமென்றால் 85 சதவீத நேரம் அவர்கள் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனம் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை முழுவதுமாக ஒழிக்க முடிவு செய்திருப்பது தெரிய வருகிறது.
டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12000 பேரை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இதனை அடுத்து டிசிஎஸ் நிறுவனம் கட்டாயப்படுத்தி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் ராஜினாமா செய்ய வைப்பதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.


Click it and Unblock the Notifications