அரசு நிறுவனத்திற்கு இணையாக மதிக்கப்பட்ட டிசிஎஸ் நிறுவனம், 2008 ரெசிஷனில் கூட 500 ஊழியர்களை மட்டுமே பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது டெக் துறையை மொத்தமாக புரட்டிப்போட்டு உள்ளது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்கு முன் அடுத்த அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் 12000 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பை தொடர்ந்து அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. டிசிஎஸ் நிர்வாகம் தற்போது இந்நிறுவனத்தில் அனுபவம் மிக்க ஊழியர்களை பணியில் அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும், ஊழியர்களுக்கான சம்பள உயர்வை உலகளவில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஐடி ஊழியர்கள் பீதியில் இருக்கும் வேளையில், இத்தகைய அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் டிசிஎஸ்-ல் பணியில் சேர காத்திருக்கும் நபர்களுக்கு இது, சோகமான செய்தியாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் நடைமுறைப்படுத்திய புதிய கொள்கையின் கீழ், பணியில் ஈடுபடாமல் பென்சில் இருக்கும் ஊழியர்களை 35 நாட்களுக்குள் புதிய ப்ராஜெக்ட்-களில் இணைய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் பணியில் இருந்தும், நிறுவனத்தை விட்டும் வெளியேறப்படுவார்கள் என அறிவித்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத், புனே, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை டிசிஎஸ் நிறுவனம் விரைவில் துவங்க உள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், ஏற்கெனவே டிசிஎஸ் நிர்வாகம் பணியில் நியமிக்க ஆஃபர் லெட்டர் வழங்கிய அனுபவமிக்க ஊழியர்களுக்கு, பணியில் இணைவதற்கு 65 நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இவர்களுடையே வேலையும் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இந்த பணிநீக்கங்கள் மற்றும் பணியமர்த்தல் தாமதங்கள் தொடர்பாக, ஐடி ஊழியர்களின் நல அமைப்பான NITES, மத்திய தொழிலாளர் அமைச்சகத்திற்கு புகார் அளித்துள்ளது. இந்த அமைப்பு, டிசிஎஸ்-இன் பணிநீக்கங்கள் "சட்டவிரோதமானவை" என்று குற்றம்சாட்டியுள்ளது.
இது, டிசிஎஸ் தொடர்பாக இந்த அமைப்பு அனுப்பிய மூன்றாவது கடிதமாகும். முதல் கடிதம், பணியில் ஈடுபடாத ஊழியர்களுக்கான புதிய கொள்கை தொடர்பாகவும், இரண்டாவது கடிதம், 600 அனுபவமிக்க ஊழியர்களின் பணியமர்த்தல் தாமதங்கள் தொடர்பாகவும் அனுப்பப்பட்டவை ஆகும். இந்த புகார்கள், ஐடி துறையில் ஊழியர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளாகும்.


Click it and Unblock the Notifications