இந்திய ஐடி சேவைத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிறுவனமாக உள்ளது. நாட்டின் பிற ஐடி சேவை நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியில் சேர்ப்பதை நிறுத்தியிருக்கும் வேளையில் டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 80000 பணியிடங்கள் காலியாக உள்ளது.
ஆனாலும் டிசிஎஸ் ஊழியர்களை பணியில் சேர்க்க முடியாமல் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. என்ன பிரச்சனை..? இதன் மூலம் கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..?

டிசிஎஸ் நிறுவனத்தில் 80,000 பணியிடங்கள் காலியாக இருந்தும் குறிப்பிடத்தக்கத் திறன் குறைபாடு காரணமாக இப்பணியிடத்தில் தகுதியான ஊழியர்களை நிரப்பத் திணறி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
டபிள்யூ.ஈ.ஐ (WEF) என சுருக்கமாக அழைக்கப்படும் உலக பொருளாதார அமைப்பு 2022 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 85 மில்லியன் திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு, இந்திய பட்டதாரிகள் தங்களை மேம்படுத்திக்கொள்ளாதது மூலம் ஏற்பட்டுள்ள இடைவெளி காரணமாகப் பல ஐ.டி நிறுவனங்கள் காலி பணியிடங்கள் இருந்தும் பணியில் சேர்க்க முடியாமல் உள்ளனர்.
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் டவுன்ஹால் கூட்டத்தில், இந்நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை குழு (RMG) தலைவரான அமர் ஷெட்டி பேசுகையில், தற்போது நிறுவனத்தில் 80,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், தற்போது உள்ள பணியாளர்களின் திறன்களுக்கும், நிறுவனத்திற்குத் தேவைப்படும் திறன்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, இந்த இடைவெளிகளை நிரப்ப டிசிஎஸ் நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களை (Contractors) நம்பியிருக்க வேண்டியுள்ளது என அமர் ஷெட்டி டவுன்ஹால் கூட்டத்தில் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இதர சில பிரச்சனைகளும் உருவெடுத்துள்ளது. டிசிஎஸ் உட்பட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, புதிய பட்டதாரிகளின் சேர்க்கையைத் தாமதப்படுத்தி வருகின்றன.
இதன் காரணமாகப் பலர் உறுதியான பணியில் சேரும் தேதி அதாவது ஆன்போர்டிங் தேதி தெரியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். நாஸென்ட் தகவல் தொழில்நுட்ப பணியாளர் சங்கம் (NITES) தகவல் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகள் இந்த தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
நாஸென்ட் தகவல் தொழில்நுட்ப பணியாளர் சங்கத்தின் தலைவர் ஹர்பிரீத் சிங் சலூஜா பேசுகையில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஜென்சார் மற்றும் எல்டிஐமைண்ட்ரி போன்ற முன்னணி ஐ.டி நிறுவனங்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டும் ஆன்போர்டிங் தேதி வழங்காமல் பட்டதாரிகளையும், டெக் ஊழியர்களையும் காத்திருக்க வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications