இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஐடி வேலைகளுக்கான பாடங்களை தேர்வு செய்து படித்து வரும் மாணவர்களுக்கும் நம்பிக்கை தரும் வகையிலான தரவுகளை வெளியிட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டது. அதில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 10,000 புதிய பட்டதாரிகளை பணி அமர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் நிகர அடிப்படையில் 4,258 புதிய வேலைவாய்ப்புகளைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,98,056ஆக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் டிசிஎஸ் நிறுவனம் மொத்தம் 13,537 பேரை வேலைக்கு சேர்த்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளாக டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் சுமார் 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு கணிசமான ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள துறை தலைவர் சுதீப் குன்னுமல் நடப்பு நிதியாண்டில் மட்டும் அதாவது இந்த 6 மாத காலத்தில் 24,000 புதிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதில் முதல் காலாண்டில் சுமார் 14,000 ஃப்ரெஷர்களும், இரண்டாவது காலாண்டில் 10,000 பேரும் நிறுவனத்தில் இணைந்துள்ளனர் என்கிறார்.
மேலும், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, குறிப்பாக புதிய தொழில்நுட்ப திறன்களுக்கு ஏற்ப தேவை எழும் போது அதுதொடர்பாக கூடுதலாக வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார். எனவே கல்லூரி பயிலும் மாணவர்கள் குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்கள் ஏஐ உள்ளிட்ட பிரிவுகளில் திறமையை வளர்த்து கொண்டால் நிச்சயம் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
டிசிஎஸ் நிறுவனம் மறுபுறம் ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் காரணமாக மொத்தமாக ஊழியர்களின் கற்றல் நேரம் 17.1 மில்லியன் மணிநேரமாக, அதாவது 17 சதவீதம் அதிகரித்துளளது. ஏஐ வருகை மற்றும் தொழில்நுட்ப துறையில் நிலவும் மாறுதல்களுக்கு மத்தியில், தொடர்ச்சியாக மூன்றாவது காலாண்டாகவும் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை டிசிஎஸ் உயர்த்தியுள்ளது. மேலும், தேவைக்கு ஏற்ப புதியவர்களை வேலைக்கு எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே ஏற்கனவே வேலையில் இருப்பவர்களும் சரி புதிதாக வேலை தேடுவோரும் சரி நவீன திறன்களை மேம்படுத்தி கொண்டால் வேலையை தக்க வைக்கலாம் , புதிய வேலைக்கும் செல்லலாம் என்பதே டிசிஎஸ் சொல்ல வரும் முக்கிய செய்தி.
இரண்டாவது காலாண்டில் , டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் அதிகரித்து 13,884 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் செயல்பாடுகளின் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் காலாண்டு அடிப்படையில் 1.3 சதவீதம் அதிகரித்து 73,188 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications

