இந்திய ஐடி துறை ஊழியர்கள் கிட்டதட்ட 2 வருடம் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையிலும், பெரும்பாலான ஊழியர்களுக்கு நிறுவனமே கொரோனா வேக்சின் கொடுத்துள்ள காரணத்தாலும் ஊழியர்கள் அனைவரையும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.
ஆனால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் வேலைத் திறன் உயர்ந்தாலும், கொரோனா தொற்றுப் பாதிப்புகள் அதிகமாகும் அபாயம் இருக்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்களும், ஊழியர்களும் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் ஐடி ஊழியர்களின் Work From Office முடிவு குறித்துத் தற்போதைய நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் இதேவேளையில் கோவிட் வேக்சின் மக்களுக்கு அதிகளவில் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர், குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பள்ளி திறக்கப்பட்டு உள்ளது. இந்த வேளையிலும் ஐடி ஊழியர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகிறார்கள்.
Work From Home
மேலும் உலக நாடுகளில் அலுவலகங்கள் முழுமையாகத் திறக்கப்பட்ட நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களின் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இந்திய ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் காரணத்தால், டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.
டிசிஎஸ்
இந்திய ஐடி துறையில் முதலாவதாக டிசிஎஸ் நிறுவனம் தான் 2020ல் கொரோனா தொற்று அதிகமாக இருந்த ஜனவரி மாதத்தில் தனது ஊழியர்கள் அனைவருக்கும் Work From Home அளித்தது. தற்போது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதிலும் முதலாவதாக உள்ளது.
டிசிஎஸ் பிளான்
டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 70 சதவீதம் பேர் முழுமையாக வேக்சின் பெற்றுள்ளனர், அதேவேளையில் 95 சதவீதம் பேர் ஒரு வேக்சின் டோஸ் எடுத்துள்ளனர். ஊழியர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்பு இந்த வருடத்தின் இறுதிக்குள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியான மிலிந் லக்காட் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ்
டிசிஎஸ் நிறுவனத்தைப் போல் அல்லாமல் இன்போசிஸ் தனது காலாண்டு முடிவில் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்காமல் ஹைப்ரிட் மாடல் முறையில் இயங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் பாதி ஊழியர்கள் வீட்டில் இருந்தும், மீதமுள்ள ஊழியர்கள் அலுவலகம் வந்தும் பணியாற்ற வேண்டும். இல்லையெனில் சுழற்சி முறையில் இயங்கவும் வாய்ப்பு உள்ளது.
ஹெச்சிஎல்
மேலும் தமிழ்நாட்டில் அதிக ஊழியர்களை வைத்திருக்கும் ஹெச்சிஎல் நிறுவனம் தனது உயர் மட்ட ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. குறைந்தது வாரத்திற்கு இரு முறையேனும் அலுவலகத்திற்கு வர உத்தரவிட்டுள்ளது.
இந்த அளவீடு இந்த வருடத்தின் இறுதிக்குள் அதிகரிக்கும் எனவும் ஹெச்சிஎல் நிறுவனத்தில் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியான வி.வி.அப்பாராவ் தெரிவித்துள்ளார்.
விப்ரோ
விப்ரோ நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் இருந்தே நிர்வாகப் பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைத்தது. இந்நிலையில் விப்ரோ நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் வேக்சின் அளிக்கப்பட்ட உடனே ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications