இந்தியாவில் ஐடி வேலை என்றாலே தனி மவுசு உண்டு. ஐடி வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை செட்டில், வெளிநாடுகளுக்கு செல்லலாம் , கை நிறைய சம்பாதிக்கலாம் என்பது தான் முன்பு இருந்த நிலைமை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
ஐடி துறையில் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. அப்படி கிடைத்தாலும் அந்த வேலை எத்தனை காலம் நீடிக்கும் என சொல்ல முடியாது. எந்த நேரமும் நீங்கள் லே ஆஃப் செய்யப்படலாம் என்பதே நிலைமை. ஐடி துறையை பொறுத்தவரை ஊழியர்கள் தலை மீது எப்போதுமே லே ஆஃப் என்ற கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால் ஐடியில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமின்றி ஐடி வேலைக்காக கல்லூரி படிப்பை தேர்வு செய்த மாணவர்களும் பெரும் கவலையில் உள்ளனர்.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் ( TCS), இன்போசிஸ் (Infosys) , ஹெச்சிஎல் டெக் ( HCLTech) , விப்ரோ ( Wipro )மற்றும் டெக் மகேந்திரா ( Tech Mahindra) ஆகியவை 2026ஆம் ஆம் நிதியாண்டு அதாவது மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் தங்களின் ஊழியர்கள் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மணி கண்ட்ரோல் செய்தியின் படி 2026ஆம் நிதியாண்டில், இந்தியாவின் முதல் 5 ஐடி நிறுவனங்களின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 7,389 பேர் குறைந்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில் மொத்தமாக 12,718 பேருக்கு வேலைவாய்ப்பு தந்த நிலையில் 2026ஆம் ஆண்டில் அது மைனஸ் 7,389 பேராக மாறியுள்ளது. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் தான் இதில் பெரும்பாலான ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது. 2025ஆம் ஆண்டில் 6,400 பேருக்கு வேலை கொடுத்த டிசிஎஸ், 2026ஆம் நிதியாண்டில் 23,460 பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இது தான் ஒட்டுமொத்தமாகவே ஐடி துறை ஊழியர்களின் எண்ணிக்கை குறைய காரணமாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிசிஎஸ் நிறுவனம் திடீரென தங்கள் ஊழியர்களில் 2% பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. முதலில் கூறப்பட்ட 12,000 பேர் தான் ஆனால் உண்மையில் நிறுவனத்தை விட்டு வெளியேறிவர்கள் எண்ணிக்கை 23,460 ஆகும்.
அதே வேளையில் இன்போசிஸ் 5,016, ஹெச்சிஎல் டெக் 3,000 , விப்ரோ 8,810 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு தந்துள்ளன. ஐடி நிறுவனங்கள் தற்போது AI மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களை பெருமளவு பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதனால் வழக்கமான பணிகளுக்கு குறைவான ஊழியர்களே தேவைப்படுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் புதிய ஐடி திட்டங்களுக்கான செலவுகளைக் குறைத்துள்ளனர். கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகப்படியான ஊழியர்களை நிறுவனங்கள் ஏற்கனவே பணியமர்த்தியிருந்தன. தற்போது புதியவர்களைச் சேர்ப்பதை விட, ஏற்கனவே உள்ள ஊழியர்களை முழுமையாகப் பயன்படுத்த நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன. இவை தான் ஐடி நிறுவன வேலைகள் சரிய முக்கிய காரணம்.
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்துவதை வெகுவாக குறைத்துள்ளது ஃபிரஸ்ஸர்களுக்கு கவலை தந்துள்ளது. தற்போது நிறுவனங்கள் 'எண்ணிக்கையை' விட 'திறமைக்கே' (Specialized skills) முக்கியத்துவம் அளிக்கின்றன. AI, Cloud Computing, மற்றும் Cybersecurity போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் உள்ளதால் அதில் திறமையை மேம்படுத்தி கொள்வது தான் வேலை பெற்று தரும்.


Click it and Unblock the Notifications

