இந்தியாவில் காலாண்டு முடிவுகளை வெளியிடும் சீசன் துவங்கியிருக்கும் வேளையில், நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் 2026 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) மந்தமான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் என்று பல ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளது. இது ஐடி பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஐடி பங்குகள் சரிவில் தடுமாறி வருகிறது.
இதன் மூலம் 280 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை துறைக்கு பலவீனமான காலமாக மாறியுள்ளது. உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஐடி சேவைக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்று நான்கு புரோக்கரேஜ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் TCS, இன்போசிஸ், HCLTech, விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற பெரிய நிறுவனங்கள் நிலையான நாணய மதிப்பில் 2.3 சதவீதம் வரையிலான வருவாய் வளர்ச்சியை இக்காலாண்டில் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலாண்டில் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது ஐடி துறைக்கு வருவாய் அதிகரிக்க சிறிய அளவில் உதவிகரமாக இருக்கும். ஏனெனில், ஐடி நிறுவனங்களுக்கான வருவாய் பெரும்பாலானவை வெளிநாட்டு நாணயத்தில் வருவதால், ரூபாய் மதிப்பு குறைந்திருப்பதால் அதிக தொகை கிடைக்கும்.
பொதுவாக இந்திய கார்ப்ரேட் துறையில் காலாண்டு முடிவுகளை வெளியிடும் சீசனை ஐடி நிறுவனங்கள் தான் துவக்கிவைக்கும். இதன் அடிப்படையில் ஐடி துறையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளகு. TCS மற்றும் HCLTech ஜனவரி 12 அன்று தனது முடிவுகளை வெளியிட உள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஐடி பங்குகளில் தடுமாற்றத்தை சந்தித்து, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சிறிய அளவிலான மீட்சியை காண முடிந்தது. இது Q3 முடிவுகள் வருவதற்கு முன் எச்சரிக்கை உணர்வாக பார்க்கப்படுகிறது. இதேபோல் முதலீட்டு நிறுவனங்களின் ரேட்டிங் குறைப்பும் இந்த சரிவுக்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. NSE ஐடி இண்டெக்ஸ் கடந்த ஒகு 1.4 சதவீதம் குறைந்து முடிந்தது. பத்து முக்கிய பங்குகளில் ஒன்பது 0.4 முதல் 2.2 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. LTI மைண்ட்டிரீ மட்டும் சிறிது உயர்ந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 0.55 சதவீதமும், டிசிஎஸ் 1.27 சதவீதமும், கோபோர்ஜ் 0.85 சதவீதமும், விப்ரோ 0.68 சதவீதமும், ஹெச்சிஎல் டெக் 0.49 சதவீதமும், டெக்மஹிந்திரா 0.18 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்போசிஸ் மட்டும் 0.09 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் ஐடி பங்குகள் நிஃப்டி இண்டெக்ஸை விட குறைவாக செயல்பட்டுள்ளன. நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் 13 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. அதே நேரம் நிஃப்டி 9.1 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த மூன்று மாதங்களில் ஐடி இண்டெக்ஸ் 9.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
இக்காலாண்டு முடிவுகள் தான் ஐடி துறையின் போக்கை தீர்மானிக்கும் பாதையாக இருக்கப்போகிறது. ஏஐ துறையில் இந்தியாவில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் பணியாற்றவும், சேவை அளிக்கவும் துவங்கியுள்ளது.

இதேபோல் பல முன்னணி நிறுவனங்கள் ஏஐ துறையில் இயங்கும் சிறு, குறு நிறுவனத்தை வாங்கியிருக்கும் காரணத்தால் ஹெட்லைன் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதும் ஐடி சேவை துறைக்கு கூடுதல் பலம்.
ஆனால் புதிய வர்த்தகம் எந்த அளவுக்கு வருகிறது என்பதில் தான் ஐடி நிறுனங்களின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இதன் அடிப்படையில் தான் ஐடி துறையின் வேலைவாய்ப்பு சந்தையின் வளர்ச்சி பாதையும் உள்ளது.
டிசிஎஸ் 12000 ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு பின்பு இந்திய ஐடி நிறுவனங்கள் பெரிய அளவிலான பணிநீக்கத்தை அறிவிக்கவில்லை. இதனால் இக்காலாண்டு முடிவுகளுக்கு பின்பு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதன் அடிப்படையில் டிசிஎஸ் தாண்டி மற்ற நிறுவனங்கள் பணிநீக்கத்தை அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications